சபரிமலை கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்காக மட்டும் 16 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் சங்க் பரிவார் அமைப்புகள் கேரளா முழுவதும் போராட்டம் நடத்தின.

நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் கேரள அரசு சபரிமலையில் பெண்கள் செல்ல வழிவகை செய்தது. அதேபோல், சபரிமலையில் வழிபட முயன்ற பெண்களுக்கு எதிராக சரணகோஷ போராட்டமும் நடைபெற்றது. இப்போராட்டங்களின்போது நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

இதற்கிடையே, இந்த பிரச்னையின்போது சபரிமலையில் நிறுத்தப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை எத்தனை, அவர்களுக்குச் செலவிடப்பட்ட தொகை எத்தனை என்பது குறித்து கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அகிலபாபு என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கோரியிருந்த நிலையில் அதற்கு கேரள அரசு பதிலளித்துள்ளது. 

அதில் மண்டல பூஜையின்போது மட்டும், 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்காக சபரிமலையில் நிறுத்தப்பட்டதாகவும், இவர்களில் 10 டிஐஜி, 42 எஸ்.பி.க்கள், 700க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது மட்டும் போலீசாருக்கென மொத்தம் 16 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், இதுபோக உணவுக்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.