தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி வலுப்படுத்தம் நோக்கில் 15 மாவட்ட செயலாளர்களின் பதவியை பறிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முடிவு  செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதா,கருணாநிதி என்ற இருபெரும் தலைமை இல்லாமல் இரண்டு கட்சிகளுமே 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளனர். அதிமுக அரசு பதவி ஏற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 5ம் ஆண்டு தொடங்கி விட்டது. இது தேர்தல் ஆண்டு என்பதால் கட்சியை சீரமைக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், அதிமுகவுக்காக பணியாற்றும்படி பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை அக்கட்சித் தலைமை ஏற்பாடு செய்துள்ளது. அவர்களது திட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது.  

அதில் பல அமைச்சர்கள் ஊழல் பேர்வழிகளாகவும், செயல்படாதவர்களாகவும் இருப்பதாக முதல்வருக்கு புகார்கள் சென்றன. பல மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மோதல் இருந்து வருகின்றன. பலர் எம்எல்ஏக்களுடன் மோதி வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் கட்சி நடவடிக்கைகள் முடங்கி இருந்தன. இதன் ஒரு கட்டமாகத்தான் அதிமுகவின் செல்வாக்கு சிலரால் சரியக்கூடும் என்ற நிலையின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் பதவி கூண்டோடு கலைக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தந்த பாடமே இந்த முடிவுக்கு காரணமாக அமைந்தது. 

அதேபோல, கடந்த 2011,2016 சட்டப்பேரவை தேர்தல், 2014 மக்களவை தேர்தலின் போது, அதிமுகவின் முதுகெலும்பு என்று ஜெயலலிதா குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு புத்துயிர் தரும் வகையில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதள் தொடர்ச்சியாக மாவட்டங்களில் தான்தான் பெரியஆளு என்று வலம் வரும் மாவட்ட செயலாளர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு, பட்டியலும் தயாராக இருக்கிறது.  அடவாடி  செய்யும் எதிர்க்கட்சிகளோடு கைகோர்த்து செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள் பதவியை பறிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக உள்ளனர். அதேநேரத்தில், கோஷ்டி பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.