டி.டி.வி.தினகரன் அணியை வளைக்காமல் விடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு முழுவீச்சில் எடப்பாடி பழனிசாமி அணி வலைவிரித்து வருவதில் 11 பேர் தலைகள் அதிமுக அணிக்கு சாயப்போவது உறுதி என பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். 

அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் பின்னால் சென்று, பதவியை பறிகொடுத்த,18 எம்.எல்.ஏக்களில், செந்தில் பாலாஜி, தி.மு.க.,வுக்கு தாவியது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து மேலும் சிலடை வளைக்க அதிமுக- திமுக ஆகிய இரு கட்சிகளும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி தகவல்கள் வெளிவந்தன. செந்தில் பாலாஜி, திமுகவுக்கு தாவிய பிறகு சிறையில் உள்ள சசிகலாவை பதவி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். அப்போது பணம் கொடுக்கச்சொல்லி சசிகலா டி.டி.விக்கு உத்தரவிட்டாராம். அப்போது தருவதாக தலையாட்டிவிட்டு வந்த டி.டி.வி இதுவரை அது குறித்து வாயே திறக்கவில்லை என்கிறார்கள்.  

 


இந்நிலையில், அதிமுக- அமமுகவை இணைத்து வைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக தங்க தமிழ்செல்வன் வெளிப்படையாக கூறியிருந்தார். பிறகு இரு கட்சிகளும் இணையும் எனக் காத்திருந்தனர் டி.டி.வி ஆதரவாளர்கள். ஆனால், செத்தாலும் அதிமுகவுடன் இணைய மாட்டேன் என அடம்பிடித்து வருகிறார் டி.டி.வி. இதனால் ஏற்கெனவே பணம், பதவி சிக்கலில் இருந்த மற்ற 17 பேரும் கடும் அதிருப்தியாகி விட்டனர். ’’அந்த 17 பேரில், 11 பேரை, மறுபடியும், அ.தி.மு.க.வில் இணைக்க பேச்சு வார்த்தை தீவிரமடைந்துள்ளது. 


இதில், தங்க தமிழ்செல்வனுக்கு வெயிட்டான வாரியத் தலைவர் பதவியும், மற்றவர்களுக்கு, கட்சியில் பொறுப்புகள் தருவதாகவும், முதல்வர் பழனிசாமியின் தூதர் ஒருவர், ரகசிய பேச்சு நடத்தி வருகிறார். நிச்சயம் அவர்கள் விரைவில் அதிமுகவில் இணைவது உறுதி. அப்படி அவர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வந்தால் பிறகு அமமுகவே இருக்காது. எடப்பாடியை பொறுத்தவரை டி.டி.வி.தினகரனை தவிர மற்றவர்கள் திரும வரலாம் எனக் கூறிவிட்டார். 

அமமுகவை அதிமுகவில் இணைத்தால் டி.டி.வி.தினகரன் அதிமுகவில் அதிகாரம் செய்யத் தொடங்கி விடுவார். ஆகையால் அவரைத் தவிர மற்றவர்களை இழுத்து வந்து விட்டால் அவர் தினகரன் தனிமை படுத்தப்படுவார். மீண்டும் அவர் அதிமுகவுக்குள் நுழைய வழியே இல்லை. அவருக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய் விடும். ஆகையால், டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள மற்றவர்களை என்ன விலை கொடுத்தாவது வளைத்து விட எடப்பாடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்’’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.