ஸ்ரீவில்லிபுத்தூர் முறைகேடாக தமிழக அரசின் முத்திரை மற்றும் பேரிடர் மேலாண்மை முத்திரைகளை பயன்படுத்தி சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்ட 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது,  அது மட்டுமின்றி அரசு முத்திரைகளை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  பரவலை தடுக்க கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தற்போது வரும் மே17 வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உள்ள சமயத்தில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்க்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு அதன் மூலமாகவே அவர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. 


இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நத்தம்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது தமிழக அரசின் முத்திரை மற்றும் பேரிடர் மேலாண்மை முத்திரையோடு ஒரு வேன் வருவதை கண்டு அந்த வேனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்தனர். அதில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் அமர்ந்திருப்பதை கண்டு வேன் ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை செய்ததில்  வேன் சென்னையைச் சேர்ந்த ஆல்வின் என்பவருக்கு சொந்தமானது என்றும் அதனை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னையில் தங்கியிருந்த 11 பேரை முறைகேடாக வாகனத்தில் அழைத்து வந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

அதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட ஓட்டுநர் ,உரிமையாளர் மற்றும் முறைகேடாக பயணம் செய்து வந்த  11 பேர் உட்பட 13 பேர் மீது நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சென்னையிலிருந்து வந்த 13 பேரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வேனின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் இருவரும் எத்தனை நபர்களை இது வரை சென்னையில் இருந்து அழைத்து வந்தார்கள் அவர்களை எங்கெங்கு இறக்கி விட்டார்கள் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சென்னையில் கொரோனா  வேகமாக பரவி வரும் நிலையில் அங்கிருந்து முறைகேடாக தென் மாவட்டங்களில் நுழைந்தவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.