தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முடிந்தது. இத்தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவானது. தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 6,28,69,955 பேர். இதில் 4,57,76,311 வாக்குகள் பதிவானது. ஆண் வாக்காளர்கள் 2,26,03,156 பேரும் பெண் வாக்காளர்கள் 2,31,71,736 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 1,419 பேரும் வாக்களித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 1,70,93,644 பேர் வாக்களிக்கவில்லை.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகமான வாக்குகள் கரூர் மாவட்டத்தில்தான் பதிவானது. இந்த மாவட்டத்தில் 83.96 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். குறைந்த வாக்குகள் சென்னையில்தான் பதிவானது. இங்கே 59.4 சதவீத வாக்குகளே பதிவானது. இதேபோல தொகுதிவாரியாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிக வாக்குகள் பதிவானது. இந்தத் தொகுதியில் 87.37 சதவீதம் பேர் வாக்களித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூரில்தான் குறைவான வாக்குகள் பதிவானது. இங்கே 55.51 சதவீத வாக்குகள் பதிவானது.


தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், வழக்கம்போல் 28 சதவீதம் பேர் வாக்களிக்காமல் புறக்கணித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது அக்கறையில்லையா? பொறுப்பின்மையா? அல்லது கொரோனா பீதி காரணமாக வாக்களிக்க வரவில்லையா என பல கேள்விகள் எழுந்துள்ளன. வருங்காலத்திலாவது இந்த அவலம் மாற வேண்டும். மாறும் என்று நம்புவோம்!