கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் மிகப் பிரமாண்டமாக வெற்றி பெற்று ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து பல அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இதன் முதல் கட்டமாக அக்டோபர் 2ம் தேதி முதல் கிராமப்புறம் மற்றும் ஊரக அளவில் செயலகங்கள் உருவாக்கப்படும் என்றும் , இவை மக்கள் பணிக்காக டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் என்றும் ஜெகன் மோகன் அறிவித்திருந்தார். இந்த மக்கள் பணியில் ஈடுபட கிராமப் புறத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு அவர்கள் பணியில் அமர்த்தப் படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

அதன்டி இந்த மக்கள் செயலகத்தில் பணியாற்ற தேர்வுகள் நடத்ப்பட்டன. இந்தத் தேர்வை எழுத 21 லட்சம் பேர் விண்ணப்பித்தனர், இதில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முதல் 8 ஆம் தேதி வரை 19.50 லட்சம் பேர் எழுத்துத் தேர்வை எழுதினர். இத்தேர்வை எழுதியவர்களில் 1.98 லட்சம் பேர் தகுதிபெற்ற நிலையில் இவர்களில் 1.26 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கு பணி நியமன் ஆணைகள் வழங்கும் விழா விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் 1 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய ஜெகன், புதிதாக பணிக்கு சேர்ந்திருப்பவர்கள் லஞ்சம் இல்லாத அரசு சேவைகளை வழங்க உறுதிகொள்ள  வேண்டும் என்றும்  இதனை வேலையாக நினைக்காமல் சேவையாக செய்ய வேண்டும் என  தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும் அரசில் காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.