இதுவரை ஒரே கட்சியுடன் மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம் என அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏராளமான அமமுக தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது ஆர்.கே.நகரை போல 40 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளிலும் வேலை பார்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ‘’மக்களவை தேர்தல், மினி சட்டமன்றத் தேர்தல் வருவதால் அதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளோம். வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவது குறித்து கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம். வெளியிடும்போது கூறப்படும். நாங்க சின்ன கட்சிங்க. மெகா கூட்டணி, பயில்வான் கூட்டணி, பெரிய பெரிய கூட்டணியெல்லாம் இருக்கு. அதைவிட்டுவிட்டு இங்க வந்து கேட்கிறீர்கள். 18 தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேட்பாளராக்கப்படுவார்களா என்பது வேட்பாளர் பட்டியல் வரும்போது பாருங்கள். நீங்க என்ன எங்களை பெருசா எடுத்துக்குறீங்க. தொலைக்காட்சிகளை எல்லாம் பார்க்கிறேன். எங்களை ஒரு பொருட்டாக நினைக்கலை. இன்னைக்கு வந்து அதிசயமாக கேட்கிறீங்க. தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிய வரும். 
 
தேர்தல் ஆணையமே நினைத்தாலும் முடியாத அளவுக்கு தேர்தல் வந்துவிட்டது. இடைத்தேர்தலை தள்ளிப்போடலாம் என்று பகிரங்க முயற்சியெல்லாம் செய்தார்கள். மத்தியில் இருக்கும் ஆட்சியும், மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் கூட்டணி வைத்திருக்கிறது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்று அவர்கள் எப்படி கூட்டணி அமைத்து இருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதுபோன்ற மெகா கூட்டணியெல்லாம் எங்களால் அமைக்க முடியாது. நாங்கள் மக்களை சந்திக்கணும், தொண்டர்களுக்கு பதில் சொல்லணும், பக்கத்து வீட்டுக்காரருக்கு, எதிர் வீட்டுக்காரருக்கு பதில் சொல்லணும். இந்த மாதிரி நாங்க கூட்டணி அமைத்தால் விட்ருவீங்களா?  தேர்தலுக்கு தேர்தல் மக்கள் புதுக்கணக்கு எழுதுவார்கள்’’ என அவர் தெரிவித்தார்.