புல்லர் கூட்டமே பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுகவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

மக்களவை தேர்தலில் அமமுக படு தோல்வி அடைந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், அக்கட்சியின் நாளிதழான நமது எம்.ஜி.ஆர் பதிலடி அளித்துள்ளது. மக்களவை தேர்தலில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக படுதோல்வியை சந்தித்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அக்கட்சி டெபாசிட் இழந்தது. இதனால், அக்கட்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடியால் தோல்வியை சந்தித்ததாக டி.டி.வி.தினகரன் கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமமுகவை ஒரு கட்சியாகவே மக்கள் மதிக்கவில்லை என்று அதிமுக விமர்சித்தது. இந்நிலையில், அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர் இதழில் தோல்வியை விமர்சித்த அதிமுகவுக்கு பதிலடி தரும் வகையில் கட்டுரை ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. 

’பூஜ்ஜியமா... ராஜ்ஜியமா... புல்லர் கூட்டமே பொறுத்திருந்து பாருங்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில், “20 நாட்களில் சின்னம் பெற்றும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றதை எல்லாம் சிறிதும் யோசிக்காமல் பபூன் போன்ற காமெடி நடிகர்கள் எகத்தாளம் பேசக்கூடாது. டி.டி.வி.தினகரன் தொண்டர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். உண்மை தொண்டர்கள் எப்போதும் துரோகிகளிடம் தஞ்சம் புக மாட்டார்கள்.

அமமுகவிற்கு ஓர் சறுக்கல்தானே தவிர, தேய்ந்து மாய்ந்து, அழிந்துபோய்விடவில்லை. கட்சி ஆரம்பித்த 20 நாட்களில் சின்னம் பெற்று, சுயேட்சையாக போட்டியிட்டு 22 லட்சம் வாக்குகளை பெறுவது என்ன சாதாரண விஷயமா?” என்று கூறப்பட்டுள்ளது.