கொரோனா வைரஸ் பற்றி பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியாக வாட்ஸ்அப் தற்பொழுது WHO உடன் கூட்டு சேர்ந்து தமிழில் அறிமுகம் செய்துள்ளது. 

சீனாவின் வூஹான் மாநிலத்திலிருந்து தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக முழு கவனம் செலுத்தி வரும் உலக சுகாதார நிறுவனம், (WHO) கடந்த மார்ச் மாதம் முதல் தனி வாட்ஸ்அப் குழு தொடங்கி, COVID-19 தொடர்பான எச்சரிக்கைகளையும், பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதத்திலும், ஒரு பிரத்யேக செய்தி சேவையைத் தொடங்கி சேவையாற்றி வருகிறது. 

கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக WHO அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, இந்தி, இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசியம் ஆகிய மொழிகளில்  அவ்வப்போதைய முன்னேற்றங்களை வாட்ஸ்அப் வழியாக அளித்து வருகிறது. சுலபமாக பயன்படுத்தக்கூடிய இந்த செய்தியிடல் சேவை 2 பில்லியன் மக்களைச் சென்றடையக் கூடிய திறனைக் கொண்டுள்ளது.  மற்றும் மக்கள் நேரடியாக எளிதில் WHO நிறுவனத்தை தொடர்புகொள்ளும் வகையிலும், சேவைகளைப் பெறவும் பயன்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்கள் முதல் சுகாதாரப் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வரை கொரோனா குறித்தான அச்சம் மற்றும் வைரஸ் பற்றிய உடனடி முன்னேற்றத் தகவல், எழும் சந்தேகங்களுக்கான  தீர்வையும் அளிக்கிறது.  பல்வேறு நாட்டு அரசாங்கங்களுக்கு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் அண்மைய சூழ்நிலை அறிக்கைகளையும் WHO வழங்குகிறது.

சமீபத்திய முன்னேற்றமாக இந்திய மொழிகளான இந்தி, தமிழ், பெங்காலி மொழிகளிலும், கூடுதலாக அரபிக், பெங்காலி, உருது மொழிகளிலும் வாட்ஸ்அப் மூலம் மக்கள் சேவையாற்றி வருவதாக WHO தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. WHO நிறுவனத்தின் கொரோனா குறித்த சமீபத்திய செய்திகள், மற்றும் அய்யங்களை தமிழில் தெரிந்து கொள்வதற்கு விருப்பமுள்ளவர்கள் கீழ்க் கண்ட இணைப்பை சொடுக்கி தமிழ் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://wa.me/41798931892?text=வணக்கம்