"தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்"..! இனி யார் இப்படி சொல்ல முடியும்..?  

தெலுங்கானா மாநில ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எப்போதும் கட்சிக்காக பயன்படுத்தும் வாரத்தை என்றால் அது தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது தான். 

இதுநாள் வரை தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை மீம்ஸ் உருவாக்கும் நெட்டிசன்கள் முதல் பொதுமக்கள் வரை ஒரு சில விதங்களில் கிண்டல் செய்து வந்தனர். பாஜக எப்படியும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.. என கூக்குரல் எழுப்பினர். இருந்தபோதிலும் எதனையும் பொருட்படுத்தாமல் தான் உண்டு தன் வேலை உண்டு... மக்கள் பணியே மகேசன் பணி ...என பாஜகவின் அருமை பெருமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார் 

பாஜகவின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு எடுத்துரைத்து கட்சி பணியில் அரும்பணி ஆற்றியவர் தமிழிசை சௌந்தரராஜன். இந்த நிலையில் பாஜக தமிழகத்தில் காலூன்றி விட்டதா இல்லையா என்பதை எல்லாம் தாண்டி தமிழிசை சௌந்தரராஜன் என்றால் பட்டிதொட்டியெங்கும் தெரியும் அளவிற்கு அவர் நடந்து கொள்ளும் விதம் அனைவராலும் கவரப்பட்டதே... 

ஒரு பெண்ணாக ஒரு அரசியல்வாதியாக ஒரு மருத்துவராக விடியற்காலை எழுந்தவுடன் இரவு தாமதமாக உறக்கத்திற்கு செல்லும் வரை அவருடைய முழு மூச்சும் அரசியலில் மட்டுமே இருந்தது. அப்படி ஒரு அரும்பாடுபட்ட தமிழிசை சவுந்தரராஜன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநராக நியமித்து அழகு பார்க்கிறது பாஜக. இதனால் தமிழக மக்கள் பெரும் வியப்பில் இருக்கின்றனர். மேலும் தமிழக மக்களுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என பேசிவந்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. 

இதுநாள்வரை கட்சிக்காக போராடியவர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என கூறி வந்தார். ஆனால் இனி அவ்வாறு யார் சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தமிழிசை தொடர்ந்து சொல்லி வரும் "தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்ற தாரக மந்திரம் தமிழக மக்கள் மனதை விட்டு மறையவே மறையாது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. இருந்தாலும் இனி யார் " தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என சொல்வார்கள் என தாமரை ஆதரவாளர்கள் புலம்ப தொடங்கி உள்ளனர்.