ஒரே மாதத்தில் திடீரென இப்படியா?... 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் முடக்கம்... வெளியானது பகீர் விளக்கம்!
இந்தியாவில் ஒரே மாதத்தில் 20 லட்சம் வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு புதிய தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் இந்த புதிய வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. முதலில் இதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியா நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், பின்னர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஏற்றுக்கொண்டன.
இந்நிலையில் புதிய விதிகளுக்குட்பட்டு மே மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 15ம் தேதி வரை 345 புகார்கள் பெறப்பட்டதாகவும், அதனடிப்படையில் 20 லட்சம் இந்திய வாட்ஸ் அப் பயனாளர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தவறுகள் நடக்கும் முன்பே அதை தடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும், ஒருவரின் கணக்கை மூன்று கட்டங்களாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதாவது பதிவு செய்தல், தகவல்களை அனுப்புதல், அதற்கான எதிர்மறையான பதிவுகளை பெறும்போது கண்காணித்து அந்த பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், அதன் மூலம் பண மோசடி உள்ளிட்ட செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்ததுள்ளது. எனவே அதனை தடுக்கும் நோக்கில் ஆய்வு மேற்கொண்டு, 20 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.