Explanation: ஜி20 மாநாட்டில் முக்கியத்துவம் பெற்ற சதுப்பு நிலக்காடு எவ்வாறு இயற்கை அழிவுகளை பாதுகாக்கிறது?
இந்தோனேஷியாவின் பாலியில் நடந்து வரும் ஜி 20 மாநாட்டில் சதுப்பு நிலக்காடுகள் முக்கிய பங்கு வகித்தது.
பாலியில் சதுப்பு நிலக்காடு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது, இது எவ்வாறு சுற்றுச் சூழலுக்கு உதவியாக இருக்கிறது, எவ்வாறு புயலை தடுக்கிறது, மணல் அரிப்பை தடுக்கிறது, தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நைட்ரேட்ஸ் , பாஸ்பரஸ் மற்றும் மாசுக்களை நீக்கி சுத்தமான தண்ணீரை வழங்குகிறது, கார்பன் டை ஆக்சைடை ஈர்த்துக் கொள்கிறது என்பது குறித்து உலகத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, சதுப்பு நிலக்காடுகள், நிலங்கள் உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது,
சதுப்புநிலங்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி கடலோரத்தைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கிறது. இது மட்டுமின்றி, புயலுக்கு தடையாகவும், கட்டிடம் மற்றும் சமையலுக்கான எரிபொருள் ஆதாரமாகவும் சதுப்பு நிலக்காடுகள் திகழ்கின்றன. மக்களை இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கிறது.
சதுப்புநிலக் காடுகள் வளிமண்டலத்தில் இருக்கும் பெருமளவிலான கார்பன் டை ஆக்சைடு எடுத்துக் கொள்கின்றன. வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது. பின்னர் அவற்றை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கார்பன் நிறைந்த நிறைந்த மண்ணாக சேமித்து வைக்கிறது. இந்த புதைக்கப்பட்ட கார்பன் "நீல கார்பன்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளான சதுப்புநில காடுகள், கடலோர புல் படுக்கைகள் மற்றும் உப்பு சதுப்பு நிலங்களில் நீருக்கடியில் சேமிக்கப்படுகிறது.
இருப்பினும், மீன்வளர்ப்பு மற்றும் விவசாய நிலமாக மாற்றுதல், கடலோர வளர்ச்சி, மாசு மற்றும் அதிகப்படியான நிலம் சுரண்டல் ஆகியவற்றால் சதுப்பு நிலங்கள் வேகமாக மறைந்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் சதுப்புநிலங்களில் கால் பகுதி அழிந்துவிட்டதாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இது பல வகையான பறவைகள், மீன்கள், பாலூட்டிகள் மற்றும் பூச்சிகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இதை நாடி இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பறி போகிறது.
சதுப்பு நிலக்காடுகள் மற்றும் நிலங்களால் என்னென்ன பலன் என்று பார்க்கலாம்:
1. சதுப்பு நிலக்காடுகள், அமேசான் காடுகளை போன்றதுதான் என்றாலும், வெப்பமண்டல காடுகளின் வகையாகும். அவை வெப்பமான, சேற்று, உப்பு நிலைகளில் செழித்து வளரும்.
2. சதுப்புநிலங்கள் காலநிலை மாற்றத்தை தணிக்கவும், மக்களுக்கும் உதவி, இயற்கைக்கு ஏற்பவும் மாறுதலுக்கு உட்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து வெப்பமண்டல காடுகளிலும் சதுப்புநிலங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலும், அவை காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சதுப்புநில மண் அதிகளவில் கார்பன் எடுத்துக் கொண்டு, தன்னுள் உள்ளடக்கி, வெளிமண்டலத்தில் கலப்பத்தை தடுக்கிறது. புயல்களின் தாக்கம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றை குறைக்கின்றன.
3. சதுப்புநிலங்கள் உயிரியல் ரீதியான சுற்றுச்சூழல் அமைப்புக்கு அடித்தளமாக அமைகின்றன. இந்த சதுப்பு நிலக்காடுகள் பல்லுயிர் வளர்ப்பு நிலமாக உள்ளது. அதாவது, பல்வேறு வகையான மீன்கள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன ஆகியவற்றுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இருக்கிறது. 40 க்கும் மேற்பட்ட பறவைகள், 10 வகையிலான ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் ஒன்று, 6 பாலூட்டி இனங்கள் என சதுப்பு நிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.
4. சதுப்புநிலங்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு இன்றியமையாதவை. லட்சக்கணக்கான மக்கள் சதுப்பு நிலங்களை நம்பி வசித்து வருகின்றனர். உணவுக்காக, கட்டிடங்களுக்கான மர ஆதாரம், மீன்பிடித்தல், சுற்றுலா, மன அமைதி, ஆன்மீக நல்வாழ்வுக்காக என்று பலரும் சதுப்பு நிலங்களை நாடியுள்ளனர். அவை உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கு மொழி, இனம், பொருளாதார உயர்வு தாழ்வுகளைக் கடந்து, வயது வரம்புகளைக் கடந்து நன்மைகளை வழங்குகின்றன. வறுமை குறைப்பு, பாலின சமத்துவம் மற்றும் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான சர்வதேச இலக்குகளுக்கு சதுப்புநிலங்கள் பங்களிக்கின்றன.
5. உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தில் சதுப்பு நிலங்கள் வகிக்கும் முக்கிய பங்கை அளவிட முடியாதது. மீன் வளர்ப்பு, மரங்கள் என்று நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே, சதுப்பு நிலங்களின் இழப்பு தேசிய மற்றும் உலகளாவிய பொருளாதாரங்களையும் பாதிக்கிறது. இதனை உணர்ந்து உலக நாடுகள் சதுப்பு நிலக் காடுகளை மீட்டெடுப்பதில் அக்கறை காட்டி வருகின்றன. இருந்தாலும், இவற்றை அடைவதற்கு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது.
புளோரிடாவில் கடந்த 2017ஆம் ஆண்டில் இர்மா சூறாவளி ஏற்பட்டபோது, அங்கிருந்த சதுப்பு நிலக்காடுகள் 1.5 பில்லியன் டாலர் அளவிற்கு அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் இருந்து 5 லட்சம் மக்களை பாதுகாத்துள்ளது.
இந்தியாவில் சுந்தர்பன் வனம், கோதாவரி கிருஷ்ணா சதுப்பு நிலம், பிதர்கனிகா சதுப்பு நிலம், கட்ச் சதுப்பு நிலம், பிச்சாவரம் சதுப்பு நிலம், தானே கிரீக் சதுப்பு நிலம், பரதாங்க் தீபகற்ப சதுப்பு நிலம், சொராவ் தீபகற்ப சதுப்பு நிலம் ஆகியவை உள்ளன.