இந்த "பை" இல்லாமல் இனி திருப்பதி லட்டு வாங்க முடியாது..! மறக்காமல் போகும் போதே வாங்கிட்டு போங்க..! 

திருப்பதி தேவஸ்தானத்தில் முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு இன்னும் சில மாதங்களில் சணல் பைகளில் லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்றரை இலட்சத்திலிருந்து 4 லட்சம் மக்கள் வரை சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் அனைவருமே பிரசாதத்தை பெற்று வீடு திரும்புவது வழக்கம். திருப்பதி சென்றால் முதலில் லட்டு எங்கே என்றுதான் மற்றவர்களும் கேட்பார்கள். அந்தவகையில் பிரசாதமாக எடுத்துச் செல்வதற்கு இதற்கு முன்னதாக பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது பேப்பர் பெட்டி, பேப்பர் பேக் போன்றவற்றிலும் லட்டுகள் விற்கப்படுகின்றன. ஆனால் பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்கும்போது தினமும் 70 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக தற்போது 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய அலுமினியம் பூசப்பட்ட சணல் பைகளை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்காக திருப்பதி கோவிலுக்கு ஏற்கனவே சணல் பைகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருப்பதி கோவிலில் இந்திய சணல் கழகம், ஒரு சிறப்பு கவுண்டர் திறந்து வைத்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சணல் பைகளை ஆர்வமாக பெற்று லட்டு வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் இன்னும் சில மாதங்களில் சணல் பை முழுமையான பயன்பாட்டிற்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எது எப்படியோ பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து இந்த அளவிற்கு தேவஸ்தானம் நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்பியுள்ளது.