அமலுக்கு வந்தது டிராபிக் ரோபோ...தமிழகத்திலேயே முதல்முறையாக சேலத்தில்... சிக்னல் போட்டு அசத்தல்..!

தமிழகத்தில் முதன் முறையாக சேலத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த டிராபிக் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் ரோபோவை அறிமுகப்படுத்திவைத்தார்.

தொழில்நுட்பம் வளர வளர நாளுக்குநாள் புது புது வரவுகள் அறிமுகமாகிக்கொண்டே வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் ரோபோக்களை வைத்து உணவு பரிமாற செய்தனர் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவி மக்களை வெகுவாக ஈர்த்தது.

இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் அடுத்த அதிரடியாக சேலத்தில் ஒரு ரோபோவை கொண்டு சிக்னலை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு. அதன்படி சேலம் அஸ்தம்பட்டி சிக்னலில் தற்போது ஒரு ரோபோவை நிறுத்தி வைக்கப்பட்டு அதன் மூலம் சிக்னல்களை இயக்கப்படுகிறது

வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, சிக்னல் விழும் போது,கையை தூக்கி காண்பிக்கும், பச்சை நிற சிக்னல் விழும் போது, போகலாம் என சைகை காட்டும்.

போக்குவரத்து காவலரை போன்றே இந்த ரோபோவும் சரியான நேரத்தில் சிக்னலை போடுகிறது. ஒரு குறிப்பிட்ட நிமிடம் கழித்து வாகனங்கள் நிறுத்த தேவையான சிவப்பு சிக்னலையும் கிளம்புவதற்காக பச்சை நிற சிக்னலையும் கூட காண்பிக்கும்.

இதில் இருக்கக்கூடிய சிறப்பம்சம் என்ன தெரியுமா..? 

மொபைல் ஆப் மூலம்,போக்குவரத்து காவலர் இயக்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் கூட இந்த ரோபோ பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.