ஆரோக்கியமான வாழ்கை முறைகளை மேற்கொண்டாலே, பிசிஓஎஸ் PCOS மற்றும் PCOD பிசிஓடி பிரச்சனையை பெரும்பகுதி குறைக்க முடியும். 

ஆரோக்கியமான வாழ்கை முறைகளை மேற்கொண்டாலே, பிசிஓஎஸ் PCOS மற்றும் PCOD பிசிஓடி பிரச்சனையை பெரும்பகுதி குறைக்க முடியும். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், கருத்தரிப்பதில் சிக்கல், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கும், மனமகிழ்ச்சிக்கும் ஒரு முக்கியக் காரணமாகும்.

சமீபத்திய கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பெண்களில் 16 சதவீதம் பேர் PCOSமற்றும் PCOD பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. மேலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில் பெண்கள் பெரிய அளவிலான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

எனவே, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண என்ன வகையாக உணவு வகைகளை உட்கொள்ளலாம் என விரிவாக இங்கே தெரிந்துகொள்வோம்.

உணவில் மாற்றம்:

அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமாகும். இது, PCOD மற்றும் PCOS பிரச்சனையை ஏற்படுத்தும்.

 எனவே, இந்த பிரச்சனையால் அவதிப்படுவோர் சத்தான உணவுகளைக் குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. உங்கள் உணவில் இஞ்சி, கிராம்பு, குங்குமப்பூ, பெருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றைக் சேர்த்துக்கொள்ளலாம்.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்:

 நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவை பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

புரத உணவுகளை சேர்க்கவும் :

நாம் நம்முடைய உணவு முறைகளில் புரதத்தைச் சேர்த்துக்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. எனவே, PCOS பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களது உணவுமுறைகளில் முட்டை, பாதாம், கடல் உணவுகள் போன்ற சத்தான, அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அதேபோன்று, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் முழுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தமில்லாமல் இருங்கள்:

மன அழுத்தம், பதற்றம் போன்றவை உங்கள் ஹார்மோன் அளவை பாதிக்கிறது. இதனால் பி.சி.ஓ.எஸ் பாதிப்பு ஏற்படும். ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கவனிக்காவிட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில் கூட பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவது, இதன் மிக முக்கியமான அறிகுறி. எனவே, இந்த நேரத்தில் உங்கள் மனதை அமைதியாக வைத்திருங்கள். இதற்காக நீங்கள் ஒவ்வொரு நாளும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். மேலும் அன்றாட உணவுமுறைகளோடு தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சியையும் பெண்கள் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்:

பெண்கள் ஐஸ்கிரீம், பழச்சாறுகள், சோடா போன்ற அதிக கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதேப்போன்று பேக்கரி பண்டங்கள், நெய் மற்றும் பாஸ்ட்புட் உணவுகள் உட்கொள்வதை தவிர்த்திட வேண்டும். இதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராது.

மேற்கண்ட உணவுமுறைகளை தங்களுடைய வாழ்க்கை முறைகளில் பின்பற்றினாலே நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம்.