கடந்த வாரம் பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி மாணவிகளை குறிவைத்து அவர்களுடன் பேஸ்புக் மூலமாக பழகி ஆபாச வீடியோக்களை எடுத்துள்ள திருநாவுக்கரசு என்ற நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இது தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் போலீசார். திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த மற்ற அனைவரும் கைதாகிய  நிலையில் இவர் மட்டும் தலைமறைவானார். இதற்கிடையில் போலீசார் தன்னை தேடுகிறது என அறிந்த திருநாவுக்கரசு தான் பேசிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், ஆபாச வீடியோ தொடர்பான விஷயத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தவறு செய்திருந்தால் அந்த பெண்ணே என்னை நேரடியாக தண்டிக்கட்டும் என்றும் மற்ற பெண்கள் தனக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு ஒரு ஆடியோ மற்றும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

திருநாவுக்கரசு செய்யும் இதுபோன்ற தில்லுமுல்லு வேலை எல்லாம் வழக்கை திசை திருப்பவே என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி காவல் நிலைய போலீசார்,  திருநாவுக்கரசை இன்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்த மொபைல் போனை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் யார் இந்த திருநாவுக்கரசு ? இதற்கு பின்னணியில் யார் யார் உள்ளனர்?அவர் சொல்வது போலவே முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வெளியே வரும் என தெரிகிறது.