20 வயது வரை ஆண் - பெண் வாழ்க்கை சற்று ஒன்று போலவே இருந்தாலும் அதன் பிறகு வேறுபடுகிறது தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விருப்பங்கள் குறித்து இருபதுகளின் இறுதியில் வாழும் பல்வேறு பெண்கள் கூறுகிறார்கள்

நகரின் பிரபல பள்ளி, கல்லூரிகளில் படித்து உடனடியாக வேலையும் பெற்றதாகக் கூறுகிறார் ஒரு பெண், ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை எங்கேனும் பயணம் மேற்கொள்வதாகவும், பயணங்கள் பல பாடங்களை கற்றுக்கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார். நன்மை - தீமை இரண்டையும் சரி பங்கு அனுபவித்து தனது 28 ஆண்டு வாழ்க்கையை நன்கு கட்டமைத்துக்கொண்டதாகவும் கூறுகிறார். தனது பெற்றோர் தன் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தாலும் அவர்களின் சில மூட நம்பிக்கைகள் சில ரகசியங்களை அவர்களிடம் இருந்து மறைக்கச் செயவதாக தெரிவிக்கிறார்.

ஒரு பெண், ஒரே ஒரு ஆணை டேட் செய்து, காதலித்து அவனையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று கூறும் மற்றொரு பெண், தான் ஒருசில ஆண்களுடன் டேட் செய்திருப்பதாக கூறுகிறார் அவர்களிடம் நன்மை - தீமைகளை அறிந்ததன் மூலம் தான் வலிமையானவளாக உருவாகியிருப்பதாக தெரிவிக்கிறார். சிலமுறை மனம் உடைந்து போயிருந்தாலும்  தைரியம், தன்னம்பிக்கை உடையவில்லை என்று கூறும் அவர், தனக்கான சரியான துணை யார் என்பதை அறிந்த பின்பே திருமணம் செய்ய இருப்பதாகவும் டேட்டிங் என்பது திருமணத்துக்கான இண்டர்வியூ என்றும் தெரிவிக்கிறார்

தனியாக அறையில் உட்கார்ந்து நாள் முழுவதும் அழுது தீர்த்தது உண்டா என்றும், சிக்கலான மனநிலையில் செய்வதறியாமல் குழம்பியதுண்டா என்றும் கேட்கிறார் ஒரு பெண்.  இதையெல்லாம் அவருக்கு ஒரு பிரேக் அப் மூலம் நேர்ந்ததாகக் கூறுகிறார். உணர்வலைகளை கையாளத் தெரியாமல் மனோதத்துவ நிபுணரிடம் சென்றதாகத் தெரிவிக்கிறார். உடல்ரீதியான கோளாறுகளை விட கொடியவை மனரீதியான கோளாறுகள் மற்றும் உணர்வு நிலை தடுமாற்றம்தான் என்கிறார்.

தனக்கு குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறுகிறார் ஒரு பெண் எப்போதாவது நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது குடிப்பது வழக்கமாம். மது அருந்துவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாகுபாடு ஏன் என்று கேள்வி எழுப்பும் அவர், தீங்கு என்றால் அது இருபாலருக்கும் தானே என கேட்கிறார். தான் பாதுகாப்பை அறிந்தே குடிப்பதாகவும் எல்லை மீறியது இல்லை என்றும் கூறுகிறார்.

சில நேரங்களில் கணவனுடன் வாழ்வது அசௌகரியமாக இருப்பதாகக் கூறுகிறார் ஒரு பெண். தன் கணவன் தனது பாதுகாப்புக்காக பல விஷயங்களை செய்வது புரிந்தாலும் தான் 8 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்கிறார். எட்டு மணி தாண்டி விட்டால் தான் ஆபத்தில் சிக்கக்கூடும் என அபாயமணி அடிக்க அவசியமில்லை என்கிறார். அழைப்பை தான் ஏற்கவில்லை என்றால் கணவனைப் போன்றே தானும் மீட்டிங்கில் இருப்பதாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தனக்கான சுதந்திரம் மற்றும் இடம் அளிக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.

பெண்கள் இருபதுகளின் இறுதிக்குள் திருமணம் செய்து முப்பதை எட்டும் முன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டம் வகுத்தது யார்? என்று கேட்கிறார் மற்றொரு பெண். 3-வது நபர்கள் முன் தனது திருமணம் குறித்து பேசப்படுவதை வெறுப்பதாகக் கூறுகிறார். தான் திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என எண்ணுவதாகவும், மனரீதியாக மற்றவர் கடமைகளை ஏற்கத் தயாராகவில்லை என்றும் தெரிவிக்கும் அவர் தனது இலட்சியங்களை அடைய உழைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.