தமிழகத்தில் 9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் வரை பள்ளிக்கூடங்களை அக்டோபர் 5-ம் தேதி முதல் திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

கொரோனா வைரஸ் பரவியதால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. பல்வேறு தளர்வுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது. ஆன்லைன் வகுப்புகள் நகர்புறங்களில் நடைமுறைக்கு வந்தாலும் கிராமப் பகுதிகளில் இன்னும் முழுமையாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது இல்லை. ஆன்ட்ராய்டு செல்போன் எல்லா மாணவர்களிமும் இல்லாத காரணத்தால் இதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்தால்தான் மாணவர்களுக்கு பாடங்கள் புரியும் என்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களின் விருப்பத்துடன் பள்ளிக்கூடங்களில் வகுப்புகளை தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது.

விருப்பப்படும் மாநிலங்கள் பெற்றோர்-ஆசிரியர்களுடன் கலந்து பேசி வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இதன்படி ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம், அசாம், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகளை திறப்பதற்கு தனியார் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் 20 பேர்களை ஒரு வகுப்பிலும், மற்ற 20 மாணவர்களை இன்னொரு வகுப்பிலும் அமர வைத்து பாடம் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அரசு அனுமதி அளித்தால் உடனே வகுப்புகளை தொடங்க தயாராக இருப்பதாகவும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

அரசு பள்ளிக்கூடங்களிலும் இதேபோல் நடைமுறையை பின்பற்றலாம் என்றும் கூறி வருகின்றனர். இதன்மூலம் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த மாதம் 30-ம் தேதி வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்றும் அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.