Asianet News TamilAsianet News Tamil

தூக்கம் தொலைத்த இந்தியர்கள் ...யார் சொல்றாங்க தெரியுமா?

தூக்கமின்மை பிரச்சனையால், அதிக அளவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Sleeping problems affecting indians
Author
Chennai, First Published Jan 16, 2022, 1:04 PM IST

நவீன கால மாற்றத்தால், உறக்கமின்மை என்பது மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. முதுமையில் பெரும்பாலோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. அறுபது வயதுக்குப் பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் ஐந்து மணி நேரத் தூக்கம் கூடப் போதுமானது தான். ஆனால், தூங்கும் நேரத்தின் அளவை விட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார் என்பதுதான் முக்கியம். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும், ஓரு இயற்கையான வழிதான் தூக்கம். ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.

பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம், தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன.  இளம் வயதில் தேவையான அளவுக்கு தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து அவர்களுடைய தூக்கத்தையும் கெடுத்து விடுகிறார்கள். 

Sleeping problems affecting indians

இது தொடர்பாக மருத்துவ ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியர்களில் 64%  பேர் போதுமான அளவு தூங்கவில்லை என்றும், 51% பேர் வரை தாங்கள் 4-6 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், 10% பேர் 4 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கமின்மையின் நீண்டகால விளைவுகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள். 

மேலும் இது நினைவாற்றல் குறைபாடுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, நீரிழிவு நோய்க்கான ஆபத்து, இதய நோய் ஆபத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில சமயங்களில் குறைந்த செக்ஸ் டிரைவ் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் மேலும் கூறினார்கள்.

Sleeping problems affecting indians

கூட்டுக் குடும்பம் என்ற கலாசாரம் மறைந்துபோய் தனிக்குடித்தனம் என்ற கலாசாரம் வந்தபிறகு  பெரும்பாலானவர்களுக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தத் தனிமை அவர்களுடைய தூக்கத்துக்கு ஆபத்தாக அமைகிறது.
பொதுவாக ஆண்களைவிடப் பெண்களையே இது அதிகமாகப் பாதிக்கும். உடல் மற்றும் மனரீதியான காரணங்களால் தூக்கமின்மை வரலாம். அல்சர், உடல்வலி, ஆஸ்துமா, ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய், தைராய்டு குறைபாடு, நடுக்குவாதம் மற்றும் மெனோபாஸ் காலத்துக்குப் பிறகான ஹார்மோன் மாற்றம் எனப் பல்வேறு காரணங்களால் தூக்கமின்மை ஏற்படலாம். சிலருக்கு மனஅழுத்தம், மனஉளைச்சல் மற்றும் மனப்பதற்றம் காரணமாகவும் தூக்கம் வராது.

எனவே, காலையில் எழுந்துகொள்ளும் நேரமும் இரவில் படுக்கப்போகும் நேரத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் போதும். தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே விழிக்கிற பழக்கம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios