டெங்குவின் பாதிப்பு  இப்படியும் தாக்கும்..?  உஷார்! 

டெங்கு ஃபீவர் எதனால் ஏற்படுகிறது? இங்கு வந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அதனை எவ்வாறு தடுக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இதற்கு முன்னதான பதிவுகளில் பார்த்தோம்.

டெங்கு குறித்த ஒரு விஷயத்தை நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 40 சதவீத மக்கள் டெங்குவால் பாதிக்ககூடிய இருப்பிடத்தில் வசித்து வருகிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதாவது 2.5 பில்லியன் மக்கள் மிக எளிதில் டெங்குவால் பாதிக்கக்கூடிய இடத்தில் வசித்து வருகின்றனர்.

பொதுவாகவே டெங்கு வர காரணமான கொசு கடித்த 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். பின்னர் பத்து நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உயிர் பிழைப்பது கடினம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும்.

டெங்கு வந்தவுடன் உடலில் தோன்றும் ஒரு சில அறிகுறிகளை பார்க்கலாம். 

தசைகள் மற்றும் எலும்பு இணைப்புகளில் அதிகப்படியான வலி, உடல் முழுக்க சிவப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாக தோன்றும், அதிக ஜுரம், 
விட்டுவிட்டு தலைவலி, கண்ணுக்கு பின் பகுதியில் அதிக வலி, வாந்தி மற்றும் மயக்கம் இவை அனைத்தும் இருக்கும். இந்த நிலையிலேயே சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. ஒருவேளை தவறிவிட்டால் அடுத்தகட்ட டெங்கு பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். அவ்வாறு பாதிக்கும் போது வேறு சில அறிகுறிகள் தென்படும் அவை என்ன என்பதை பார்க்கலாம்.

வாய், ஈரல், மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் கசியலாம், சில்லென்று சில சமயத்தில் காணப்படும், ரத்த நாளங்கள் சிதற வாய்ப்பு உண்டு. உடலின் உட்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக இரத்த வாந்தி வருவது, குறைவான நாடித்துடிப்பு, சிவப்பு நிறத்தில் சிறு சிறு புள்ளிகள் உடல் முழுவதும் தோன்றும்.

இதைத் தவிர திடீரெனக் குறையும் ரத்த அழுத்தம், திடீரென அதிக ரத்த கசிவு, தொடர்ந்து வாந்தி, ரத்த நாளங்களில் இருந்து இரத்தம் கசிவு உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

இவ்வாறு ஏற்பட்டால் நாம் முதலில் செய்ய வேண்டியது நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிப்பதே. தண்ணீரில் உப்பு கலந்து குடிக்க  எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு கொடுக்கும்போது நம் உடலுக்கு தேவையான தாதுப்பொருட்கள் சேர்ந்துவிடும். 

மேலும் ஜுரத்திற்கு பொதுவாகவே பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ரத்தம் உட்செலுத்துதல் மற்றும் ரத்த தட்டணுக்களை உட்செலுத்தலாம்.

இவ்வாறு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால்  மட்டுமே, பூரண குணமடைய முடியும்.