சென்னையில் நிவர் புயல் மற்றும் கனமழையால் பள்ளங்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து வருகின்றன. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட மழையால்  அனைத்து நீர்நிலைகளும் பெருகின. இதனால் பாம்புகள் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன. உடனடியாக கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் கிண்டி வனத்துறைக்கு தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், முடிச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டதாக 123 அழைப்புகள் வந்தன.

இதையடுத்து கிண்டி வனத்துறையில் இருந்த பாம்பு பிடிக்கும் நபர்கள் சென்று பாம்புகளை லாவகமாக பிடித்தனர். இதில் நல்ல பாம்புகள், சாரை பாம்புகள், தண்ணீர் பாம்புகள், வில்லிகோல் வரையன் பாம்புகள், பச்ச பாம்புகள் உள்ளிட்ட 100 பாம்புகள் பிடிப்பட்டன. பிடிக்கப்பட்ட பாம்புகள் காப்பு காடுகளில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் பாம்புகள் வீடுகளுக்குள் பதுங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.