Asianet News TamilAsianet News Tamil

ரூ. 1 லட்சத்துக்கு ஏலம் போன எலுமிச்சை பழங்கள் - காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

கடந்த ஆண்டு ஏலத்தில் எலுமிச்சை பழம் வாங்கி, பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்று தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

rathinavel murugan temple lemons sold for rs. 1 lakh
Author
Tamil Nadu, First Published Mar 21, 2022, 1:26 PM IST

தெய்வ பக்தி ஒவ்வொருத்தர் விருப்பங்களை சார்ந்தது. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரின் வளர்ப்பு, வாழும் சூழல், கல்வி மற்றும் பழக்கவழக்கங்களை ஒட்டியே இருக்கும். சிலர் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பர், சிலர் கடவுளே இல்லை என்பர். இன்னும், சிலர் அறிவியல் காரணங்களை எடுத்துக் கூறி இது தான் கடவுள் என்றும் கூறுவர்.

எதுவாயினும், நம் நாட்டில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எண்ணிக்கை சற்றே அதிகம் எனலாம். மத உணர்வுகளை கடந்து கடவுள் பக்தி என்பது ஒருவரின் உள்ளுணர்வுகளோடு ஒட்டி இருக்கிறது. மேலும் ஒருவரின் செயல் மற்றும் நடத்தை என அனைத்துமே இதை வைத்தே தீர்மானித்து விடலாம். அனைத்து மத வழிபாடுகளிலும் நேர்த்திக் கடன், ராசி பலன் என பல்வேறு விஷங்கள் கடவுள் நம்பிக்கையில் வெளிப்படுகிறது.

ரத்தினவேல் முருகன் கோவில்:

அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டத்தில் எலுமிச்சை பழங்கள் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விழுப்புரம் மாவடத்தின் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் எனும் கிராமத்தில் தான் இந்த ஏலம் நடைபெற்றது. ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள ரத்தினவேல் முருகன் கோவில் அந்த சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமான வழிபாட்டு தளமாக விளங்குகிறது.

இந்த கோவிலின் சிறப்பம்சம் இங்கு, முருகன் சிலைக்கு பதில் கருவறையில் வேல் மட்டும் தான் இடம்பெற்று இருக்கிறது. ரத்தினவேல் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழா ஒன்பது நாட்கள் மிக விசேஷமாக நடைபெறும். திருவிழா நாட்களில் ரத்தினவேல் முருகன் கோவில் வேலில் தினமும் எலுமிச்சை பழங்கள் சொருகப்பட்டு, அதன்பின் சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெறும்.

பங்குனி உத்திர திருவிழா:

திருவிழா நாட்களில் பூஜைக்காக வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்கள், பங்குனி உத்திரத்தின் மறுநாள் நள்ளிரவு வேளையில் ஏலம் விடப்படும். அதன்படி சில நாட்களுக்கு முன் பங்குனி உத்திர திருவிழா எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில், நள்ளிரவு 11 மணிக்கு ஏலம் துவங்கியது. ஏலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்ப பிரச்சினை உள்ளவர்கள் என பலத்தரப்பட்டோர் கலந்து கொண்டு எலுமிச்சை பழத்தை வாங்க முற்பட்டனர்.

இதில் ஒரு எலுமிச்சை பழம் அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. மொத்தம் ஒன்பது எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. அந்த வகையில் ஏல விற்பனையில் மொத்தம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை வசூல் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏலத்தில் சென்னை, திருச்சி, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் என பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

கடந்த ஆண்டு ஏலத்தில் எலுமிச்சை பழம் வாங்கி, பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்று தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். கடந்த ஆண்டு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த ஆண்டு குழந்தையுடன் வந்து குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை வைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios