அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரளவிற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் தேர்தல் தேதி என்பதால் மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆவலாக உள்ளனர். இந்நிலையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உள்கர்நாடக மாநில முதல் குமரி வரையிலான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது உருவாகி உள்ளதால், மேலும் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீச போகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய தொடங்குமாம்.

பின்னர் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், இந்த மழையின் மூலம் டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் பரவலான மழை வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், கடலூர், நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.

அதேபோன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம்.  சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்க மட்டுமே வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்த்த அளவிற்கு மழை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.