கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 20ம் தேதி முதல் சில தளர்வுகள் நடைமுறைக்கு வர உள்ள நிலையில் டாஸ் மாக் கடைகளை தமிழக அரசு திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைப்பொருள், கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர், மெக்கானிக் தொழில் செய்வோருக்கு அனுமதி. சிறு, குறு தொழில் ஈடுபடுவோர் பணிகளைத் தொடரலாம். முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிகளைத் தொடரலாம். விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் திருடுவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு டாஸ்மாக் கடைகள் மூடியுள்ளதால் தமிழக அரசுக்குப் பெரிய அளவில் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை அரசு கருத்தில் கொண்டு புதிய நேரக் கட்டுப்பாட்டுகள் மற்றும் ஒரு சில விதிமுறைகளின்படி டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகி வருகிறது. 

ஆனால், ஏப்ரல் 30-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்து இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.