வர்தா புயல், அதற்கு முந்தைய வருடம் சென்னையை புரட்டி போட்ட வெள்ளம், அதற்கு முன்பாக தானே புயல் என தொடர்ந்து அடுத்தடுத்து வந்த மழை அறிவிப்புகளை தொலைக்காட்சிகளில் தோன்றி  துல்லியமாக கூறி வந்த வானிலை ரமணனை, மழை அறிவிப்பை செய்ய சொல்லுங்க என பொதுமக்கள் ஆங்காங்கே ஆதங்கப்படுவதை தற்போது கேட்க முடிகிறது.

தமிழகத்தில் தற்போது, உச்சகட்ட வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், சுமார் ஒரு கோடி பேர் வசிக்கும் சென்னை மாநகரில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. சென்னை முழுவதும் உள்ள அலுவலங்கங்களின் டாய்லெட்டுகள், நாற்றம் எடுத்து குடலை புரட்டி போடுகின்றன. 

அலுவலகங்களிலிருந்து, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயற்கை உபாதையை கழிக்க ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக சென்றதால், தற்போது மெட்ரோ  ரயில் நிலைய கழிப்பிடம் மூடப்படும் அவநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது 

பேச்சுலர்கள் தங்கும் மேன்ஷன் எனப்படும் தங்கும் விடுதிகள், பிரபலமான ஓட்டல்கள், பியூட்டி பார்லர்கள், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் நீச்சல் குளங்கள் என அடுத்தடுத்து இழுத்து மூடப்படும் நிலைக்கு சென்னை தள்ளப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வியாபாரிகள், அலுவலகம் செல்லும்  ஊழியர்கள் கையை பிசைந்து நிற்கின்றனர். இவர்கள் ஒருபக்கம் என்றால், சென்னையில் வாழும் பல இல்லத்தரசிகள் பாடோ படும் திண்டாட்டமாகி உள்ளது. அதனால் இல்லத்தரசிகள் தொடர்ந்து என்னே செய்வது.. என்ன செய்வது என்று புரியாமல் புலம்புவது தற்போது வாடிக்கையாகி விட்டது.

இயற்கை வஞ்சிக்கும் நிலையில், தவளைக்கும், தவளைக்கும்  கல்யாணம், நாய்க்கும்  நாய்க்கும் கல்யாணம், நீரில் உட்கார்ந்து புரோகிதர்களின் பூஜை என தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் மழை வந்த பாடில்லை. 

இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்று உள்ள இல்லத்தரசிகள், முன்பெல்லாம் வானிலை முன்னறிவிப்பில் பிரபலமாக இருந்த ரமணனை வர சொல்லுங்கப்பா.. என என்று ஆங்காங்கு புலம்புவதை பல இடங்களில் கேட்க முடிகிறது. 

மத்திய அரசின் ஆய்வு நிறுவனமான வானிலை மையம் என்பது, தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 10 கும் மேற்பட்ட இயக்குநர்கள் பணி புரிகின்றனர். இந்த இயக்குநர்களில் ஒரே நிலையில் பதவியில் இருந்தாலும் கூட, ஓய்வு பெற்ற ரமணன் அறிவிக்கும் போது சொல்லி வைத்தார் போல் மழை வந்தது என பெண்களுக்கு மத்தியில் ஒரு சென்டிமெண்டாக மாறி உள்ளது.

ரமணன் சொல்லிட்டாருல்ல..மழை வந்திடும்... நாளைக்கு மழை வருதான்னு  ரமணன் சொல்றாரா பாரு ஸ்கூல் லீவு விடுவாங்க... வீட்டில் சுப காரியங்கள் செய்யும் போதும், ரமணன் மழை வரும்னு சொன்னாரா ஒரு முறை செக் பண்ணிக்கோங்க.. என்று பொதுமக்கள் பேசும் அளவிற்கு பிரபலமாகி இருந்தார் ரமணன். இந்த நிலையில் தான், ரமணன் மீண்டும் வரமாட்டாரா..? வந்து மழை குறித்து நல்ல செய்தி சொல்ல மாட்டாரா... என்ற ஆதங்கத்தோடு, மழையையும் தண்ணீரையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் பெண்கள். அருவி என்பது உண்மை, செண்டிமெண்ட் என்பது கானல் நீர் என்றாலும், சில சந்தர்ப்பங்கள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் சில விஷயங்களை நம்பி தானே ஆக வேண்டி உள்ளது.