சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், நவம்பர் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். ஆனால், இந்தாண்டு கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு 10 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பூஜை காலங்களில் தினமும் 1,000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தர்களுக்கும், விழா காலங்களில் 5,000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.