பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை மாற்றுவதற்கான கொள்கையை அடுத்த மாதம் முதல் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காற்று மாசபாட்டை தவிர்க்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பழைய வாகனங்களை ஒழிக்க, மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வர உள்ளது. பழைய வாகனங்களை ஒப்படைத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகைகள் வழங்கவும் இந்த புதிய திட்டம் வகை செய்யும்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, பழைய வாகனங்களை மாற்றுவதற்கான வெஹிகிள் ஸ்கிராப்பிங் பாலிஸி (Vehicle Scrapping Policy) விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த தகவல்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வழங்கியுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கைக்கான அமைச்சரவை குறிப்பு தயாராக இருப்பதாக கூறினார்.

நேற்று முன் தினம் மாநிலங்களவையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தகுதியற்ற மற்றும் பழைய வாகனங்களை அகற்றுவதற்கான புதிய கொள்கை திட்டத்திற்கான அமைச்சரவை குறிப்பு தயாராக உள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், மந்தநிலையையும் சரிவையும் எதிர்கொள்ளும் ஆட்டோமொபைல் துறை மேம்படுவதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி அடையும். வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனங்கள் 30 சதவீதம் வரை மலிவாக கிடைக்கும். பழைய வாகனங்கள் அகற்றப்படுவதால், காற்று மாசுபாடு 25 சதவீதம் குறையும். அதே நேரத்தில், பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் மையங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்பும் உருவாகும். பழைய காரை அப்புறப்படுத்தும் மையங்களில் விற்ற பிறகு, அதற்கான ஆவணங்களை காண்பித்தால், புதிய காரின் பதிவு இலவசமாக செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த ஸ்கிராப் கொள்கையின் கீழ் சுமார் 2.80 கோடி வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொள்கையின் மூலம், வாகனத்தை பிரித்து அப்புறப்படுத்தும் மையங்கள் பெரிய அளவில் கட்டப்படும். இது அதிக எண்ணிக்கையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். அதே நேரத்தில், மறுசுழற்சியில் எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக் போன்ற பாகங்களை ஆட்டோமொபைல் துறை மலிவாகப் பெற முடியும்.

பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை திட்டம் விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு, அதனை செயல்படுத்தும் நடைமுறைகள் தொடங்கும். இந்த கொரோனா நேரத்தில், ஸ்கிராப் கொள்கை, பொருளாதாரத்திற்கு ஒரு உயிர்நாடியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.