வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை இரவு தென்மேற்கு வங்கக்கடலில் 70-80 கி.மீ வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்றும், இலங்கை கடற்கரையில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் தமிழ்நாடு-கேரளா கடற்கரைகளில், நாளை மறுதினம், டிசம்பர் 2 ஆம் தேதி 55 – 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் நாளை முதல் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும், கிழக்கு இலங்கை கடற்கரை, கொமொரின் பகுதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளை முதல் வரும் 3-ம் தேதி வரை அதிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான கனமழை பெய்யக்கூடும். இதனிடையே வங்கக்கடலில் புதிய புயல் உருவாகவுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.