மோட்டார் வாகன உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக பெருமளவு நஷ்டத்தைத் வந்தித்து வருகிறது. குறிப்பாக வாகன விற்பனை சரிந்ததால் இத் தொழில் மந்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி, உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஹீரோ மோட்டார் நிறுவனம் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. சந்தையில் தேவையை பொறுத்து, உற்பத்தி திட்டமிடலை மேற்கொள்ள இது உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிவிஎஸ் லூகாஸ் நிறுவனம் ஏற்கெனவே சில நாள்களை வேலையில்லா நாள்களாக அறிவித்திருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட மூன்று பிரிவுகளைத் தவிர்த்து மற்ற பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கு இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 16, 17) வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் வரை, 8 முதல் 14 நாள்கள் தங்களது தொழிற்கூடங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 8 நாள்களும், மாருதி சுஸுக்கி 3 நாள்களும், டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் 8 நாள்களும், அசோக் லெய்லேண்ட் நிறுவனம் 9 நாள்களும், போஸ்ச் நிறுவனம் 10 நாள்களும், ஜம்மா ஆட்டோ நிறுவனம் 20 நாள்களும் மற்றும் வாப்கோ நிறுவனம் 19 நாள்களும் தங்களது தொழிற்கூடங்களை மூடுவதாக அறிவித்துள்ளன.

ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் ஐந்து இடங்களில் தொழிற்கூடங்கள் உள்ளன. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் ஆறாவதாக ஒரு தொழிற்கூடம் கட்டப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 5,35,810 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூலை மாத விற்பனையை ஒப்பிடுகையில் 21 சதவீதம் குறைவாகும்.

நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே ஹீரோ நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது, ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை விற்பனைக்கு அனுப்பியுள்ளது.

வியாபார மந்தநிலை காரணமாக தொடர்ந்து முன்னணி நிறுவனங்கள் வேலை நாள்களை குறைத்துவருவதால் லட்சக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.