ஜல்லிக்கட்டு பார்க்க பிரதமர் வருகிறாரா..? அமைச்சர் புதிய தகவல்..!

இந்த ஆண்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர் ஜோதி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தலைமை தாங்கிய ஆர்.பி உதயகுமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தொடர் ஜோதி பயணம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் மூலம் மதுரை முழுக்க 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய நிறை குறைகளை கேட்டறிந்து தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்கள் வசித்து வரும் இடங்களுக்கு உரிய பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ஸ்டாலினுக்கு இந்த ஒரு நடைபயணம் பல உண்மைகளை புரியவைக்கும். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை வரவைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளார். இதன் மூலம், அடுத்த 2 மாதங்களில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிரதமர் மோடி வருவாரா..? என்ற எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.