பழைய சொத்து வரியை செலுத்தினாலே போதும்.. புதிய வரி முறை வேண்டாம்..! அமைச்சர் அதிரடி..!

உயர்த்தப்பட்ட சொத்து வரி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக பழைய வரியை செலுத்தினால் போதும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் மற்ற அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி உயர்த்தி கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. அதன்படி 50 முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும் அதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாலும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் எஸ் பி வேலுமணி

 "உயர்த்தப்பட்ட சொத்து வரி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதனை மறுசீராய்வு செய்வதற்கும் தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மறுபரிசீலனை செய்து இறுதியாக ஓர் அறிவிப்பு மீண்டும் வரும் வரை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-க்கு முன் எழுதப்பட்ட சொத்து வரியிலேயே உரிமையாளர்கள் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் புது விதிகளின்படி, சொத்துவரி செலுத்தி இருப்பவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் செலுத்தும் போது அதனை சரி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 1998ஆம் ஆண்டு தான் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது புதிய சொத்து வரி நிறுத்தி வைப்பதற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும்  எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார் அமைச்சர் எஸ் பி வேலுமணி.