சிறப்பாக மரம் வளர்த்த பள்ளிகளுக்கு ‘ஈஷா பசுமை பள்ளி’விருது...! அமைச்சர் அமைச்சர் பாராட்டு...! 

ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக் கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருதுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் நேற்று முன் தினம் (பிப்ரவரி 1) வழங்கி கவுரவித்தார்.

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் மற்றும் தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட பசுமை பள்ளி இயக்கத்தின் 3-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா தாம்பரத்தில் உள்ள ஸனந்தா ஹாலில் இன்று நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிட்லபாக்கம் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் திரு. தாமோதரன், ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் திரு.செங்கோட்டையன் பேசியதாவது:

சத்குரு தலைமையில் செயல்படும் ஈஷா மையம் மரக் கன்று வளர்க்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது. மரங்கள் வளர்ப்பதால் என்ன பயன் விளையும் என்பதை எல்லாரும் உணர்ந்து கொண்டு இருக்கிறோம். அதை செயல்படுத்தும் முறையை ஈஷா பசுமை பள்ளி இயக்கமானது அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்காக ஈஷாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மரங்களால் தான் நாம் சுவாசித்து கொண்டிருக்கிறோம். மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் மரங்கள் மிக அவசியம். பஞ்சபூதங்களில் ஒன்றான பூமியில் இருக்கும் மரங்களை பேணி காப்பதன் கடமை நமக்கு உள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இவ்வியக்கத்தின் மூலம் 45 லட்சம் மரங்களை மாணவர்கள் நட்டு வரலாறு படைத்திருக்கிறார்கள். அந்த வரலாற்றை மென்மேலும் உயர்த்த பள்ளி கல்வித் துறை உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார். 

ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா பேசியதாவது:

ஈஷா பசுமை பள்ளி இயக்கம் தமிழக பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பசுமை பள்ளி என்னும் சுற்றுச்சூழல் திட்டத்தை 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு மரக் கன்று வளர்ப்பு மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் (செங்கல்பட்டு உட்பட) 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு மரக் கன்று மற்றும் சுற்றுச்சூழல் களப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களே நேரடியாக தங்கள் பள்ளிகளில் நர்சரி அமைத்து 5 லட்சத்து 60 ஆயிரம் மரக் கன்றுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அந்த மரக் கன்றுகள் பள்ளி வளாகங்கள், மாணவர்களின் வீடுகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் நடப்பட்டுள்ளது.

மரக் கன்று வளர்ப்பு பயிற்சி மட்டுமின்றி, பறவைகள் பார்வையிடல், பல்லுயிர் பெருக்க கருத்தரங்கம், சுற்றுச்சூழல் சுற்றுலா, மூலிகை தோட்டம் அமைத்தல் போன்ற பல்வேறு வழிகள் மூலம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, காலையில் ’சுற்றுச்சூழல் மேம்பாட்டில் எனது பங்கு’ என்ற கருப்பொருளில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியும் நடைபெற்றது.