தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் செலுத்தப்பட இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. உலகில் பல நாடுகளின் முயற்சியில் இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து 26 மருந்துகள் மனித உடலில் செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவைரஸ் தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் பொருத்தப்படுவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனுடன் வரும் வீடியோவில், மைக்ரோசிப் உருவாக்கிய குழுவில் அங்கம் வகித்த திட்ட மேலாளர் என கூறும் நபர் பகீர் தகவல்களை தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த வீடியோ 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வீடியோவில் இருப்பது அமெரிக்க மத போதகர் கால் சாண்டர்ஸ். உண்மையில் இவர் மைக்ரோசிப்களை பற்றியே பேசி இருக்கிறாரே தவிர, கொரோனா வைரஸ் பற்றி பேசவில்லை. அந்த வகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் மனித உடலில் மைக்ரோசிப் பொருத்தப்பட இருப்பதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகி உள்ளது.  இதன் மூலம் இந்தச் செய்தி போலியானது எனத் தெரிய வந்துள்ளது.