50 வயதில் தொழில் தொடங்கிய இந்திய கோடீஸ்வர பெண்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் தனது 50 ஆவது வயதில் தொழில் தொடங்கி, தொழிலில் சாதிக்க வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்துள்ளார்
நாட்டின் மிகப்பெரிய பணக்கார பெண்ணான, நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர் (60), இந்தியவின் இரண்டு பெண் கோடீஸ்வரர்களில் ஒருவர். அவரது சொத்து மதிப்பு ரூ.22,324 கோடியாக உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர் ஃபால்குனி நாயர். அவரது தந்தை ஒரு தொழிலதிபர். மும்பையின் சிடன்ஹாம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த ஃபால்குனி நாயர், அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் எம்பிஏ முதுகலை பட்டம் பெற்றார்.
ஏஎஃப் பெர்குசன் நிறுவனத்தில் பணி புரிந்த அவர், அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, 1993ஆம் ஆண்டில் கோடக் மஹிந்திரா குழுமத்தில் பணியில் சேர்ந்தார். லண்டன் மற்றும் நியூயார்க்கில் பணியாற்றிய அவர், 2001ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார். கோடக் மஹிந்திரா கேபிட்டலின் நிர்வாக இயக்குநராக 2005ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
ரூ.19,000 கோடி சொத்து! இந்தியாவின் 3வது பணக்கார பெண்.. அட நம்ம சென்னையை சேர்ந்தவங்க தான்..
இதையடுத்து, சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்ட அவர், 2012ஆம் ஆண்டில் Nykaa எனும் ஆன்லைன் வணிக நிறுவனத்தை ஆரம்பித்தார். தனது சொந்த சேமிப்பில் 20 லட்சம் முதலீட்டில் அந்த நிறுவனத்தை ஆரம்பித்தபோது, ஃபால்குனி நாயரின் வயது 50. நைக்கா நிறுவனம் படிப்படியாக வளர்ந்து, தற்போது அதன் நிகர மதிப்பு ரூ. 50,000 கோடியாக அதிகரித்துள்ளது. ஃபால்குனி நாயரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.22,324 கோடியாக உள்ளது.
தொழில் தொடங்க வயது ஒரு தடை அல்ல என்று சாதித்துக் காட்டியுள்ள ஃபால்குனி நாயருக்கு தற்போது 60 வயதாகிறது. நைக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அவர் உள்ளார். ஃபால்குனி நாயரின் கணவர் சஞ்சய் கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அந்த தம்பதிக்கு அத்வைதா நாயர் மற்றும் அஞ்சித் நாயர் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் நைக்கா நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.