ஒமிக்ரான் மூன்றாம் அலையின் சந்தேகங்களுக்கு, மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம் என்ன என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒமிக்ரான் மூன்றாம் அலை மின்னல் வேகத்தில், அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு 9,692 அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே,முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, போன்றவை முக்கியமானவை என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், ஒமிக்ரான் பாதிப்பு உயிரிழப்புகள், குறைவாக உள்ளது நம்மை சற்று நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.
இந்நிலையில்,மக்களுக்கு, இந்தத் தொற்று குறித்த ஏராளமான சந்தேகங்கள், கேள்விகள், குழப்பங்கள் தொடர்கின்றன. இதற்கு மருத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம் என்ன என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.

பூஸ்டர் தடுப்பூசி:
தொற்று நோய் மருத்துவர்கள் கூறும்போது, பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்தினால் எதிர்காலத்தில் நோய் வராது என்று சொல்ல முடியாது. ஆனால், அதைச் செலுத்திக்கொண்டால் கடுமையான பாதிப்பு, உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும். காசநோய் தடுப்பூசியைச் செலுத்தினால் நோய் பாதிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மூளை பாதிப்புகள் போன்றவை ஏற்படாது. கொரோனா தடுப்பூசி 3-வது வகையைச் சேர்ந்தது. கடுமையான தொற்றைக் குறைத்து, உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தடுப்பூசியின் நோக்கம் என்கின்றனர் மருத்துவர்கள்.
டெல்டா, ஒமிக்ரான் இதில் எந்த வகை கொரோனா:
ஒரு நபருக்கு காணப்படும் அறிகுறிகளை வைத்து அது கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் என்றெல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல முடியாது. ஜீன் சீக்வென்சிங் டெஸ்ட் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டியது. எனவே அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். சிலருக்கு கொரோனா தொற்றியபோது கடுமையான உடல்வலி, தலைவலி என அறிகுறிகள் கிட்டத்தட்ட டெங்குவை போன்றே இருந்தன. டெங்குவாக இருக்கலாம் என டெஸ்ட் செய்தபோது, அது கோவிட் என உறுதியானது. எனவே, அறிகுறிகளை வைத்து யாரும் தானாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். அதே நேரத்தில் அலட்சியமும் வேண்டாம். இது யாருக்கு உயிர்சேதத்தை ஏற்படுத்தும் என்பதையும் நம்மால் சொல்ல முடியாது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிய வேண்டுமா?
வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் என்றால் வீட்டில் இருக்கும்போது மாஸ்க் அணியத் தேவையில்லை. ஆனால், அக்கம்பக்கத்து வீட்டாருடன் பேச வேண்டிய நிலையில் வீட்டுக்குள்ளும் மாஸ்க் அணிய வேண்டும். அறைக்குள் இருக்கும்போது கொரோனாவின் பரவல் வேகம் மிக மிக அதிகம். அதிலும் ஒமிக்ரான் பரவ, 15 நிமிடங்கள் எல்லாம் தேவையில்லை, ஒரு நிமிடம் போதும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே இருக்கும்போதும், சாப்பிடுவது, டீ குடிப்பது போன்ற அவசியமான விஷயங்களின் போதும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது பாதுகாப்பானது என்கின்றனர் மருத்துவர்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்வது ரிஸ்க்கா?
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், ரிஸ்க் இருக்கவே செய்கிறது. 100 சதவிகித பாதுகாப்பு வேண்டும் என்றால் வெளியே போகாமல் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் தொற்றுக்குள்ளானவர்கள், தீவிர நிலைக்குச் செல்வதில்லை என்பதை மருத்துவர்களாகிய நாங்கள் பார்க்கிறோம் என்கின்றனர்.
ஒமிக்ரான் ஆபத்தில்லாதது என்று நம்பலாமா?
ஒமிக்ரான் ஆபத்தில்லாதது என்றால் உயிரிழப்புகளே இருக்கக்கூடாது. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் டெல்டா ஏற்படுத்திய உயிரிழப்புகளில் ஒமிக்ரான் உயிரிழப்புகள் 16 சதவிகிதம் இருப்பதாகச் சொல்கிறார்கள் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

குழந்தைகளுக்கு பாதிப்பு:
மூன்றாம் அலையில் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். அப்படி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பிரச்னைகள் பெரிதாக இல்லை என்றாலும், நோய் பாதித்த 30 நாள்களுக்குப் பிறகு நீரிழிவு இருப்பது கண்டுபிடிக்கப்படுவதாக அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சொல்கிறது. எனவே, எப்போதும் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
