ஒரு முண்டாசு... இரு கோடு மீசை... மகாகவி பாரதியின் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை..!

இந்தியத் திருநாட்டின் ஒப்பற்ற மாமனிதர்களில் ஒருவன், மகாகவி பாரதி. ‘இவரைத் தலைவராக கொள்ளலாம், நம்பிப் பின்பற்றலாம்; நல்லது’என்று ’தைரியமாய்’சுட்டலாம்.
 

Mahakavi Bharathi's birthday special article ..!

இந்தியத் திருநாட்டின் ஒப்பற்ற மாமனிதர்களில் ஒருவன், மகாகவி பாரதி. ‘இவரைத் தலைவராக கொள்ளலாம், நம்பிப் பின்பற்றலாம்; நல்லது’என்று ’தைரியமாய்’சுட்டலாம்.
 
இலட்சியப் பிடிப்புடன் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ நினைக்கிற யாருக்கும் பாரதி, ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணம். காரணம், சொன்னதோடு நில்லாமல், ‘அதற்குத் தக’நின்ற வாய்மையாளன் பாரதி. தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிற ஒவ்வொரு தமிழரும், பாரதியைத் தன் வழிகாட்டியாய்க் கொண்டு இருத்தல், ஏதோ தற்செயலாய் நிகழ்ந்தது அல்ல. அவருக்கு இணையான உந்து சக்தியாக வேறொரு பிம்பத்தை முன் நிறுத்த முடியவில்லை. பாரதியின் தாக்கம் அப்படி.Mahakavi Bharathi's birthday special article ..!

இலக்கிய நயம், சொல்லாற்றல், கற்பனை வளம், பாடுபொருள், பாடல் திறன்... அத்தனையும் தாண்டி, பாரதியிடம் வேறு ஏதோ ஒன்று இருக்கவே செய்கிறது. பாரதியின் முழு உருவம் கூட வேண்டாம். முண்டாசு போல ஒரு கோடு, சற்று கீழே, இடைவெளி விட்டு இரு மீசைக் கோடுகள். போதும். பாரதி  ‘வந்து விடுகிறார்’. இந்த கம்பீர எளிமை, பாரதியின் தனி அடையாளம். இதுதான் நம்மை அவர் அருகே இழுத்து உட்கார வைத்து விடுகிறது. பாரதியின் பாடல்களில் ஒலிக்கும் யதார்த்தம், நம்மை அசர வைக்கிறது. ஆயிரம்தான் ‘நம்பிக்கை வாசகங்கள்’இருந்தாலும், அவர் கூறும் உபாயங்கள்தாம் நம்மை சிந்திக்க வைக்கின்றன... செயல்பட வைக்கின்றன.

’இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே... இயந்திரங்கள் வகுத்திடுவீரே...’இது கவிதை அல்ல... கட்டியம். ‘நோயிலே படுப்பதென்னே...’இது வினா அல்ல; வினை. ’நோன்பிலே உயிர்ப்பதென்னே...’எதிர்வினா அன்று; எதிர்வினை.  ‘சென்றதினி மீளாது...’இது ஆறுதல்; சத்தியம். இதற்கும் மாற்று உண்டு. ’இன்று புதிதாய்ப் பிறந்தோம்...’என்கிற எண்ணம்; தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்தல். ‘பாரதி சிகிச்சை’! Mahakavi Bharathi's birthday special article ..!
 
தேச விடுதலைக்குப் போராடிய பாரதி, கவிஞன். பேச்சாளன்; எழுத்தாளன்; பத்திரிகையாளன். மானுடம் பாடிய பாரதி  ஒரு மகான். ‘வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்..?’எனும் ஆற்றாமை; ’மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ...’எனும் போது ஆத்திரம்; ’அறிவு மேம்படல் வேண்டும். இங்கு அத்தனை பேருக்கும் ஒன்றாய்...’என்கிற ஆர்வம். “நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை..”என்கிற ஆர்ப்பரிப்பு. பாரதியின் பரிமாணங்களில் இந்த பரந்துபட்ட பார்வைதான் ஆகச் சிறந்தது. 

பாரதியின் வீரம் - அலைகடல்; பாரதியின் விவேகமோ – ஆழ்கடல். ’பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே...” ’சண்டை செய்தாலுஞ் சகோதரர் அன்றோ..?’ ’அன்பு தனில் செழித்திடும் வையம்’,’உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்...’அறிவைத் தூண்டி விட முயன்ற பாரதி, உணர்ச்சிகளைத் தூண்டிவிட ஒருபோதும் முயற்சித்தானில்லை. ’சாதி மதங்களைப் பாரோம்” என்கிற சத்தியப் பிரகடனம், பாரதியின் உயிர் மூச்சு. ’எல்லாரும் ஓர் நிறை’ எனும் சமரசக் கோட்பாடு, அவன் கண்ட பரிபூரணக் குடியரசுத் தத்துவம்.

கூனிக் குறுகி நிற்றல் வேண்டா; ’குன்றென நிமிர்ந்து’நின்று, ’கூடித் தொழில் செய்தல்’அவனது சமுதாய நெறிமுறை. ’ஊண் மிக விரும்பு’ ’பணத்தினைப் பெருக்கு’என்று யதார்த்தம் பாடிய தோழன் பாரதி. ஆண்டுக்கு ஒருமுறை கோலாகலமாகக் கொண்டாடித் தீர்ப்பதற்கான நாளாக பாரதியின் பிறந்த நாள் கடந்து சென்று விடக் கூடாது. ஒவ்வொரு நாளும் கடமை புரிந்து, சிறிது அளவேனும் வளர்ச்சி காண வேண்டும். இதனை ஒருபோதும் கைவிடாது தொடர்ந்து செய்தல் வேண்டும். பாரதி கூறுகிறான், “நாள்தொறும் வினை செய்’,’நுனியளவு செல்’,’நோற்பது விடேல்’ இதனால், ‘நினைத்தது முடியும்.’

’இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’இவ்வாழ்க்கை என்று நம்பி நகர்ந்தவன் பாரதி. ’ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’, ’புன்மை தீர்ப்ப முயலுவம்’,’வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’, ”உண்மைகள் சொல்வோம், பல வண்மைகள் செய்வோம்’… செயல், செயல், செயல். செயல் திறன் மட்டுமே பாரதியின் வேட்கை. பாடல் வரிகளை அட்சரம் பிசகாது ஒப்புவித்தல், பக்கம் பக்கமாய்ப் ‘புகழ்’ பாடுதல், கவிதை வணக்கம் செலுத்துதல், படத்தைப் பல்லக்கில் சுமந்து செல்லுதல், தலைவர்களை அழைத்து வாழ்த்து கூறுதல்… அவரவர், பாரதி மீது கொண்ட தன்னலமற்ற அன்பினை தத்தம் வழிகளில் வெளிக்காட்டுவதில் மகிழ்ச்சி.

ஈவத்தனையும் விட, பொதுநலன், பொதுநோக்கு, பொதுப்பணியின் மீது, சிறுவர், இளைஞர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துதல், அவர்களை அதில் ஈடுபடுத்துதல் – பாரதிக்கு ஆற்றுகிற, ஆகச் சிறந்த, ஆத்மார்த்த அஞ்சலியாக இருக்கும். விழா நாயகன் அல்ல; பாரதி – வீதி நாயகன். விளம்பர வெளிச்சம் பாரதிக்குத் தேவை இல்லை. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட யுகபுருஷன் பாரதி, ஓட்டத்தின் அடையாளம்; “ஆற்றல் பெருக்கும் அறிவே சக்தி” என்று முழங்கிய பாரதி, ஓர் அற்புதமான உந்து சக்தி

.Mahakavi Bharathi's birthday special article ..!
 
சிலைகளில் மண்டபங்களில் விழாக்களில் ஊர்வலங்களில் ‘ஆண்டுக்கொரு முறை உயிர் பெறுகிற’தலைவர்கள் வரிசையில் பாரதி இல்லை. அன்றாட வாழ்வில், ‘சோர்வுற்று வறுமை மிஞ்சி’சோம்பிக் கிடக்கும் போதெல்லாம் தட்டி எழுப்பி, ‘களத்துக்கு’நம்மைத் தயார் செய்து அனுப்பும், ‘நம்புதற்குரிய’ நல்லாசான் – பாரதி. உரக்கச் சொல்லுதல், பழக்கம் கருதி; பறக்கச் செய்தலே அவனது நோக்கம். இந்நாளில் பாரதியின் ‘செய்தி’இதுவன்றி வேறில்லை: 
‘இருப்போர்’எழுக. நிற்போர். நடக்க. நடப்போர்... ஓடுக. ஓடுவோர்... பறக்க! 

கட்டுரையாளர்:-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios