சமஸ்கிருதம் தெரிந்துகொண்டால், மற்ற மொழிகளை கற்பது எளிது! - டாக்டர் நூரிமா யாஸ்மின் சாஸ்திரி!
அஸ்ஸாமை சேர்ந்த முஸ்லிம் பெண். அரபு, பாரசீகம் மற்றும் உருது மொழிகளைக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக சமஸ்கிருதம் படித்து, அதில் சாஸ்திரி பட்டம் பெற்று தன் பெயரின் பின்னாலு் இணைத்துக்கொண்டுள்ளார்.
டாக்டர் நூரிமா யாஸ்மின் தனது பள்ளியில் தொடங்கி, பல்கலைக்கழக உயர் படிப்புகள் வரை சமஸ்கிருதம் படித்துள்ளார். தற்போது, நல்பாரியில் உள்ள குமார் பாஸ்கர் பர்மா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் பண்டைய ஆய்வுகள்பிரிவில் சமஸ்கிருதத்தின் இணை பேராசிரியராக இருந்து சமஸ்கிருதம் கற்பிக்கிறார்.
இந்து மற்றும் பெளத்தத்தின் புனித மொழியாக சமஸ்கிருதம் விழங்குகிறது. தற்போதைய சமஸ்கிருத மொழியின் முந்தைய வடிவம் வேத சமஸ்கிருதம் எனப்படுகிறது. இந்து மதத்தின் மிக பழமையான நூலான ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்ட மொழியாகும். இந்து மதத்தின் அனைத்து வேத சாஸ்திரங்கள் மற்றும் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன.
டாக்டர் நூரிமா யாஸ்மின், அஸ்ஸாம் மாநிலம், மேற்குப் பகுதியில் உள்ள ரங்கியா பகுதியில் பிறந்து வளரந்தார். மறைந்த அல் பர்தி கான் மற்றும் ஷமினா காதுன் ஆகியோருக்கு இளைய மகளாக பிறந்தார். அவரது தந்தை அலி பர்தி கா, ரங்கியா மேல்நிலைப் பள்ளியின் ஆங்கிலத்துறை ஆசிரியராக இருந்தார்.
நூரிமா, தனது பள்ளிக் கல்வியை ரங்கியா மேல்நிலைப் பள்ளியில் முடித்தார், பின்னர் காட்டன் கல்லூரியில் (தற்போது காட்டன் பல்கலைக்கழகம்) சேர்ந்து சமஸ்கிருதத்தில் சிறப்புடன் பட்டம் பெற்றார். தொடர்ந்து கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் MA மற்றும் M.Phil பட்டங்களையும் பெற்றார்.
நூரிமா 2008 இல் சமஸ்கிருதத்தில் சாஸ்திரி பட்டமும், 2015ல் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர், குமார் பாஸ்கர் பர்மா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் புராதன ஆய்வுகள் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
சமஸ்கிருதம் குறித்த கருத்து தெரிவித்துள்ள நூரிமா, "சமஸ்கிருதம் ஒரு ஆழமான மற்றும் தீவிரமான மொழி. இது ஒரு மதம் மட்டுமல்ல. சமஸ்கிருதம் ஒரு தெய்வீக மொழி மற்றும் அனைத்து மொழிகளின் வேர் என குறிப்பிட்டா். சமஸ்கிருதம் படிப்பதன் மூலம் மற்ற மொழிகளை எளிதாகவும் முழுமையாகவும் கற்க உதவுகிறது என்றார். மேலும், நாம் அனைவரும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்றும் நூரிமா தெரிவித்துள்ளார்.
8ம் வகுப்பிலிருந்து சமஸ்கிருதம் படித்து வருவதாகவும், பள்ளிப்படிப்பு முதல் உயர்கல்வி படிக்கும் வரையிலும் தான் சமஸ்கிருதம் படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்றும் நூரிமா தெரிவித்தார். சமஸ்கிருதம் பற்றி தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருப்பதால், அனைவரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக டாக்டர் நூரிமா யாஸ்மின் சாஸ்திரி கூறியுள்ளார்.
டாக்டர் நூரிமா யாஸ்மின், அசாமின் தர்ராங் மாவட்டத்தில் உள்ள மங்கல்தாய் சிவில் மருத்துவமனையின் மருத்துவரான டாக்டர் ஷம்சுல் ஹக்கை மணந்துகொண்டு, இரு குழந்தைகளுடன் தற்போது வசித்து வருகிறார்.
இன்றைய காலத்தில், மதத்தின் பெயரால் நம்மைச் சுற்றி பல்வேறு கருத்துக்களை கேட்க முடிகிறது. ஆனால் புனித குரானிலும், வேதங்களிலும் மற்ற மதங்கள் குறித்த வேற்று கருத்துகள் இல்லை. நான் குர்ஆன் மற்றும் வேதங்கள் இரண்டையும் படித்துள்ளேன்" என்கிறார் டாக்டர் நூரிமா