கேமரா உற்பத்தியில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த கோடக் நிறுவனம், தற்போது தனது புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஸ்மார்ட் போன் உற்பத்தியில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்த கோடக் நிறுவனம்,அப்போது IM5 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது.ஆனால் இந்த போனிற்கு அதிக வரவேற்பு கிடைக்காததால், தற்போது ”எக்ட்ரா” என்ற தனது புதிய ஸ்மார்ட் போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
பார்ப்பதற்கு ஒரு கேமிரா போல காட்சியளிக்கும் இந்த ஸ்மார்ட் போனில் புகைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக 21 MP சோனி சென்சார் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.வளைவான மூலைகளை கொண்டுள்ள இந்த போனின் மேல்புறத்தில் ஷட்டர் பட்டன் அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து இன்ச் திரை,1080P டிஸ்பிளே, deca-core MediaTek Helio X20 பிராசசர்,3 ஜி.பி ராம்,32 ஜி.பி இன்டர்னல் மெமரி,விரைவில் சார்ஜ் ஆகக்கூடிய திறனுள்ள 3000 mAh பேட்டரி ஆகிய வசதிகள் இந்த ஸ்மார்ட் போனில் உள்ளன. ஆன்ட்ராய்டு மார்ஷ்மாலோ 6.0 இயங்குதளத்தில் இது இயங்கும்.
முதலில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர உள்ள எக்ட்ரா போனின் விலை,550 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த போனை கோடக் நிறுவனத்திற்காக புல்லிட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
