வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி..! களத்தில் இறங்கும் கதிர் ஆனந்த்...! 

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி, 80 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை கொண்ட வேலூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் நடைபெற்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலூரில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இல்லாதது பெருங்குறையாக உள்ளது

தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டின் மிக முக்கிய மூன்று படைகளில் பணியாற்றி வருகின்றனர்.இதெல்லாம் தவிர்த்து ஏற்கனவே ஓய்வு பெற்ற 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களின்  நலன் கருதியும், அவர்களது வாரிசுகள் பயன்பெறும் வகையிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என கடந்த 2010 ஆம் ஆண்டு,அப்போதைய இந்திய ராணுவ துணை தளபதியாக இருந்த தம்புராஜிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து, பள்ளியை அமைக்க 2011-ம் ஆண்டிலேயே சுமார் 10.9 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது மாவட்ட நிர்வாகம். ஆனால் அந்த பகுதி தகுதியற்ற இடமாக கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் அந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக அங்கு கேந்திரிய வித்யாலயா உருவாக்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக விரைந்து நடவடிக்கை எடுத்து விரைவில் அங்கு பள்ளி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவிக்கும்போது, வேலூர் தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோன்று வேலூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்வதிலும்  இதே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நடந்து முடிந்த கூட்டத்தொடரிலும் இது குறித்து குரல் எழுப்பி உள்ளோம். விரைவில் இதற்கான நடவடிக்கையில் எடுக்க வலியுறுத்தப்படும்" என தெரிவித்து உள்ளார்.