வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை நாளை மறுநாள் பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த புயல் கரையை கடப்பது குறித்து வானிலை தன்னார்வலர் ப்ரதீப் ஜான்,’’நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால், சென்னை – பாண்டிச்சேரி இடையே கடக்கும். ஒருவேளை தாமதம் இல்லாமல் கரையை கடந்தால், காரைக்கால் – கடலூர் இடையே கரையைக் கடக்கும். ஒட்டுமொத்த வட தமிழகம் மற்றும் வட உள் மாவட்டங்களில் 100% கனமழை பெய்யும்’’ என்று கணித்துள்ளார்.