உள்ளாடைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியம் சார்ந்ததும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக நம்மில் பலர் ஆடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளுக்குக் கொடுப்பதில்லை. உள்ளாடைதானே என்று விலை குறைந்த மலிவான துணிகளில் வாங்குவது என்று இந்த மனோபாவம் இன்றும் பலரிடம் இருக்கிறது. ஆடையின் வெளித்தோற்றம் நாம் தேர்வு செய்யும் உள்ளாடையைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள் ஸ்டைலிஸ்ட்கள். மேலும், உள்ளாடைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியம் சார்ந்ததும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உள்ளாடைகள் தோற்றத்துக்கு மட்டுமன்றி ஆரோக்கியத்துக்கும் எந்தளவுக்கு முக்கியமானவை?இது தொடர்பாக விஷயங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எந்த வகை உள்ளாடை ஆரோக்கியமானது..?
காற்றோட்டமுள்ள வகையில் துணி மற்றும் வடிவமைப்பு கொண்ட உள்ளாடையே சிறந்தது. அந்த வகையில், காட்டன்தான் சிறந்தது. நைலான், பாலிஸ்டர் போன்ற சிந்தடிக் மெட்டீரியல் வகை உள்ளாடைகளில் ஈரம்பட்டால் அதை உறிஞ்சிக்கொள்ளாது. இது பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தி, வெள்ளைப்படுதலை அதிகப்படுத்தலாம். எனவே, இதுபோன்ற துணி ரகங்களால் ஆன உள்ளாடைகளை நீண்ட நேரம் அணிவதைத் தவிர்க்கவும். வடிவமைப்பை பொறுத்தவரை பிகினி, பாய் ஷார்ட்ஸ், க்ளாஸிக் பிரீஃப், ஹிப்ஸ்டர், ஃப்ரென்ச் கட் என எந்த வடிவமைப்பை தேர்ந்தெடுத்தாலும், அதிலுள்ள கட் இறுக்கமாக இருப்பது போல உணர்ந்தால், அதைத் தவிர்த்துவிட்டு வேறு வசதியான மாடலை தேர்வு செய்யலாம். அதிக இறுக்கம், அந்தரங்கப் பகுதியில் எரிச்சலுணர்வு, அரிப்பை ஏற்படுத்தலாம்.
வெயிலில் காயவைக்க வேண்டும்:
இன்றும் பல பெண்கள் சங்கோஜத்தினால் உள்ளாடைகளை வெளியிலோ, மொட்டை மாடியிலோ காய வைக்காமல், பிறர் கண்படாதபடி இருக்க வேண்டும் என நிழலில் அல்லது ஒரு துணிக்கு அடியில் காயப்போட்டு உலர்த்துகிறார்கள். உள்ளாடைகளை சூரிய ஒளி நேரடியாகப்படும் வகையில் காயவைக்க வேண்டும். அப்போதுதான் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் உள்ளாடைகளில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். புடவை, சுடிதார் போல இதுவும் ஓர் ஆடை என்று அதை இயல்பாக்க வேண்டும்.
நிறங்கள் பாதிப்பை ஏற்படுத்துமா?

மருத்துவ ரீதியாக, உள்ளாடைகளின் நிறங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் பெரிய சம்பந்தமில்லை. கறுப்பு நிற பிரா அணிந்தால் மார்பகப் புற்றுநோய் வரும் என்ற நம்பிக்கை தவறானது. அதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கோடைக்காலத்தில் கறுப்பு போன்ற அடர் நிறத்திலான ஆடைகள் அணியும்போது சூரிய ஒளியை ஆடைகள் அதிகம் கிரகித்துக்கொள்ளும் என்றாலும் அது வெளியில் அணியும் ஆடைகளுக்குத் தான் பொருந்துமே தவிர, உள்ளாடைகளுக்கு இல்லை.
இரவு உறங்கச் செல்லும்போது உள்ளாடைகள் அணிவதைத் தவிர்ப்பதால் இறுக்கம், உராய்வு இல்லாமல் காற்றோட்டமாக இருக்கும். பகலில் இருந்த இறுக்கம் தளர்ந்து, தசைகளும் தளர்ந்து, அழுத்தம் (Pressure) இல்லாமல் ரத்த ஓட்டமும் சீராகும். இறுக்கமான உள்ளாடைகளால் உடலின் மைய தட்பவெப்பம் அதிகரிக்கும். இந்த தட்பவெப்பம் வேறுபாட்டால், தூக்க முறை தொடங்கி பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும்.எனவே, இரவில் தளர்வான ஆடைகள் அணிவதால் இவையெல்லாம் மேம்படும். அதனால்தான் இரவு ஆடைகள் தளர்வாக உருவாக்கப்படுகின்றன. இனி ஷாப்பிங்கில் உள்ளாடைகளுக்கும் உரிய கவனம் கொடுப்பது அவசியம்.
