சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் சுவையான இளநீர் பிரியாணி எப்படி செய்வது என்று கீழே தெரிந்துகொள்ளலாம். 

இன்றைய நவீன உலகில், பெரும்பாலோனோருக்கு பிடித்த உணவாக பிரியாணி மாறிவருகிறது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால், மீன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி என்று பலவிதமான பிரியாணி வகைகள் உள்ளன. அந்த வரிசையில் இன்று இளநீர் பிரியாணி இணைந்து டிரெண்ட் ஆகி வருகிறது.அரிசி வகைகள், தம் பிரியாணி, மூங்கில் பிரியாணி, மண் பானை பிரியாணி, இலை பிரியாணி என பல வகை பிரியாணிகளில் ஒவ்வொருவரும், ஒரு விதமான ருசி படைத்தோர். 

கடந்த 2021ஆம் ஆண்டில் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தை பிடித்தது. இது தொடர்பான ஆய்வறிக்கையை ஸ்விகி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. 

கடந்த 2020 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில், இந்த 2021 ஆம் ஆண்டு ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணிகளும் ஒரு செகண்டிற்கு 2 பிரியாணிகளும் ஆர்டர் செய்யப்பட்டன. வெஜிடபிள் பிரியாணியை பொருத்தவரை சிக்கன் பிரியாணியை விட 4.3 மடங்கு குறைவாக ஆர்டர் செய்யப்பட்டது. கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிக்கன் பிரியாணியை மிகவும் விரும்பி ஆர்டர் செய்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது. 

 சுவையான இளநீர் பிரியாணி எப்படி செய்வது என்று கீழே தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கொங்கு இளநீர் - 5.

சீரக சம்பா - 1/2 கிலோ

சிக்கன் - அரை கிலோ

வெண்ணெய் - 2 டீஸ்புன் 

வெங்காயம் - 100 கிராம்,

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 10,

இஞ்சிப் பூண்டு விழுது - 2 டீஸ்புன் 

தேங்காய்ப்பால் - 100 கிராம்,

உப்பு - சிறிதளவு.

கொத்தமல்லி - சிறிதளவு.

சீரகம் - 1 டீஸ்புன் 

பெருஞ்சீரகம் - 1டீஸ்புன் 

பட்டை - சிறிதளவு.

ஏலக்காய், கிராம்பு - தலா 4

பிரியாணி இலை - சிறிதளவு.

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் சீரக சம்பா அரிசியை முக்கால் பதத்துக்கு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததைத் தனியாக கொட்டி ஆறவிடவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து, சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி, சிக்கனை சேர்த்து வதக்கவும்.

அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை சேர்த்து சிக்கன் வேகும் வரை சமைக்கவும்.

இப்போது ஆறவைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி இளநீர் குடுவையில் மூடி தணலில் தம் போடணும். முன்பே அடுப்பு கரியில் தணல் போட்டு வைக்கவும்.

இருபது நிமிடங்கள் வேகவைத்து கொத்தமல்லி, மிளகுத் தூள் தூவி சூடாகப் பரிமாறவும். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.