வெயில் இப்படி கொளுத்தும் போதே.... மழை அப்படி வராதா என்ன..? 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியிலிருந்து வரக்கூடிய காற்று சென்னை அருகே ஒன்று சேர்ந்தாலும் தென்மேற்கு பருவ காற்று காரணமாகவும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.

தெற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் நீலகிரி மாவட்டம் தேவாலயாவில் 7 செ.மீ மழையும் கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு, சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.