அதிகமாக கோபப்படும் குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் சமாளிக்க பெற்றோர் இதை ஃபாலோ பண்ணுங்க.. நச்னு 5 டிப்ஸ்!!
Parenting Tips : குழந்தைகளின் கோபத்தை குறைத்து அவர்களை அமைதிபடுத்த என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள 5 குறிப்புகளை இங்கு காணலாம்.
வீட்டில் குழந்தைகள் இருப்பது மனதுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் உயர் ரத்த அழுத்தத்தையே ஏற்படுத்திவிடும். அவர்களை கவனித்து கொள்வது அத்தனை எளிதான காரியம் கிடையாது. எதை சொன்னாலும் கேட்காத பருவம் தான் குழந்தை பருவம். தங்கள் விருப்பத்திற்கு இருக்கவே குழந்தைகள் விரும்புவார்கள். சில நேரங்களில் குழந்தைகளின் ஆத்திர நடவடிக்கைகள் பெற்றோருக்கும் கோபத்தை தூண்டும். இந்த மாதிரி நேரத்தில் சூழலை முறையாக கையாள தெரிந்துவிட்டால் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
குழந்தைகள் சேட்டை செய்யும்போது அவர்களை அடித்து துன்புறுத்தி தான் சரி செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால் நாட்டில் முக்கால்வாசி பெற்றோர் குழந்தைகளை அடித்து நையபுடைத்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் குழந்தைகளுக்கும் பெற்றோர் மீது கோபம் வரும். மனரீதியான மாற்றங்கள் ஏற்படும். இதை தவிர்த்து கோபத்தின் உச்சத்தில் இருந்தாலும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது என்பதை குறித்து இங்கு காணலாம்.
அமைதியே தீர்வு:
பெற்றோரின் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் முக்கிய காரணம் அவர்கள் சோர்வாக இருப்பதுதான். குழந்தைகள் கோபப்படும்போது, எரிச்சலூட்டும் ஏதேனும் காரியங்கள் செய்யும் போது குழந்தையின் பெற்றோரும் கூடவே கோபப்படுவதால் அது நிலைமையை மோசமாக்குகிறது. இதற்கு பதிலாக குழந்தைகள் கோபப்படும்போது நீங்கள் பொறுமையாக இருந்தால் அவர்களே கொஞ்ச நேரத்தில் சாந்தமாகிவிடுவார்கள். அதன் பின் அவர்களுடன் விளையாடுவது, உரையாடுவது என நேரம் செலவிடுங்கள். இதனால் குழந்தைகளும் மனம் புண்படாமல் உங்களுடன் இணக்கமாக இருப்பர்.
வன்முறைகள் கூடாது:
குழந்தைகள் கோபத்தில் பொருள்களை உடைப்பது, பெற்றோரை, உடன்பிறந்தவர்களை அடிப்பது போன்ற செயல்களின் ஈடுபட்டால் அதை தடுக்க முயலுங்கள். ஆனால் பதிலுக்கு நீங்களும் வன்முறையில் ஈடுபடாதீர்கள். அது தவறான முன்னுதாரணமாகிவிடும். சண்டையிடும், கோபப்படும் குழந்தையை அந்த இடத்திலிருந்து அழைத்து சென்று அமர வையுங்கள்.
உரையாடுங்கள்:
கோபம் தணிந்து அமைதியான நிலைக்கு திரும்பிய பிறகு குழந்தையிடம் உரையாட வேண்டும். அவர்களின் கோபத்தின் நியாயம் குறித்து கேட்க வேண்டும். அவர்களிடம் அரவணைப்பாய் பேச வேண்டும். கோபத்தை வெளிபடுத்த வன்முறை வழியல்ல என்பதை எடுத்து கூற வேண்டும். கோபம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தவறு இருப்பின் அதை தன்மையாக எடுத்து சொல்லுங்கள். எப்போதும் குழந்தைகளை குற்றப்படுத்தாதீர்கள்.
கோபத்தைக் குறைக்கும் வழிகள்:
அடக்க முடியாத கோபம் வரும்போது மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது என்பதை குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும். கோபத்தை உடல் செயல்பாடுகளால் தணிக்கலாம். உதாரணமாக கோபம் வரும்போது வீட்டில் உள்ள சுவற்றில் எழுதிவிட்டு அதனை ஈரத்துணியால் துடைக்கலாம். காகிதத்தில் எழுதிவிட்டு அதில் கப்பல் செய்து தண்ணீரில் மிதக்க விடலாம். கோபத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்தலாம்.
மன்னிப்பு:
எல்லா விஷயங்களுக்கும் கோபப்பட வேண்டியதில்லை என்பதை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். அவர்களுக்கு மன்னிக்க சொல்லிக் கொடுங்கள். பழிவாங்கும் உணர்வை தவிர்ப்பதே கோபத்தை பாதி கட்டுப்படுத்திவிடும்.
பெற்றோர் தான் முன்மாதிரி:
குழந்தைகள் தாங்கள் எதை பார்த்து வளர்கிறார்களோ அதையே தான் செய்வார்கள். நீங்கள் கோபத்தை சரியாக கையாண்டால் அவர்களும் அதை பார்த்து கற்று கொள்வார்கள். நீங்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களை எப்படி சமாளிப்பீர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். நிச்சயம் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.