போனில் பேசியபடியே வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் கர்நாடக மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி கர்நாடக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள இந்த உத்தரவில் செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கினால் ரூபாய் ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், மீறி மீண்டும் செல்போனில் பேசியபடியே வாகனத்தை இயக்கினால் ரூபாய் 2000 வசூலிக்கப்படும். அதன் பிறகு பிடிபடும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 500 அதிகமாக செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

அதேபோன்று அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் அதி வேகமாக சென்றால் ரூபாய் இரண்டாயிரம் அபராத தொகையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் இரண்டாயிரம் வசூலிக்கப்படும் என்றும் இரண்டாவது முறையாக பிடிபட்டால்,  5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று வாகனம் நிறுத்த கூடாத இடத்தில் நிறுத்தினால்,  1,650 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்படும் என்றும் இதற்கு முன்னதாக 350 ரூபாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறை ரூபாய் 2000 அல்லது 6 மாத சிறை தண்டனையும், இரண்டாவது முறை மது அருந்திவிட்டு பிடிபட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை ரொக்கமாகவும் கொடுக்கலாம் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.