தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை..! இடி மின்னலும் கூட..! 

தற்போது தர்மபுரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

கர்நாடக மாநிலம் முதல் குமரி கடல் பகுதி வரை மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், குறிப்பாக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் நேற்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக வேலூர் திருவண்ணாமலை தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காளி பேட்டை, மஞ்சவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஓட்டு போட சென்றவர்கள் பாதி வழியிலேயே வீடு திரும்பியவாறு வாக்கு அளிக்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

அதேவேளையில் கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும் பொது மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்