சென்னையில் எப்போது தான் மழை பெய்ய போகிறதோ என காத்திருந்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி புதுச்சேரி மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தென் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் 6 சென்டிமீட்டர் மழை அதிகம் பதிவாகி உள்ளது. அதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரங்களில் லேசான மழை இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

குறிப்பாக சென்னை மவுண்ட் ரோடு, நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் , போரூர், காட்டுப்பாக்கம்,செங்கல்பட்டு,மெரினா என சென்னை முழுக்க பல்வேறு இடங்களில்   மழை பெய்து வருகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கடந்த வாரம் ஆளும் அதிமுக அரசு மழை வர வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அதற்கு ஏற்றவாறு சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே இது ஆளும் எடப்பாடிக்கு யோக மழையா அல்லது யாக மழையா என பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

காரணம்... தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஆளும் அதிமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க் கட்சியான திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், சென்ற வாரம் தமிழகம் முழுவதும் காலிகுடங்களுடன் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது, மேலும் இதனை திசைதிருப்பவே யாகம் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் மழை பெய்து வருவதால் இது ஆளும் எடப்பாடி அரசுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்றே கூறலாம், எனவே மொத்தத்தில் இது எடப்பாடிக்கு  யோக மழையா அல்லது யாக மழையா என  விமர்சனங்களே எழுந்துள்ளது.