தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர தயக்கம் காண்பிக்கின்றனர். இதற்கிடையில் நேற்று மற்றும் இன்று அனல் காற்று வீசக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதற்கேற்றவாறு, இப்போதே வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி உள்ளது. நேற்று முன்தினம் திருத்தணியில்104 டிகிரி வெப்பம் பதிவாகியது. இந்த நிலையில் குறிப்பாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் மார்ச் 7 ஆம் தேதியான இன்று கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. 

இந்த 13 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பம் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனவே கோடை காலத்தில் எங்கு சென்றாலும் தன்னுடன் ஒரு குடை மற்றும் குடிக்க தண்ணீர் வைத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை காலை வேளையில் வெளியில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது நல்லது.

மத்திய வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கட்டாயம் மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.