கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேநேரத்தில் வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இணை நோய்கள் உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது.

கட்டுமானப் பகுதிகள், நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாகவே கட்டுமானப் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் பரவுகிறது.

தஞ்சாவூர் மற்றும் சென்னை தண்டையார்பேட்டையில் கட்டுமானப் பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை குறைக்கக் கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளதால் இனிவரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும். வரும் நாட்களில் கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்”என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.