உணவு, அரசியல் இரண்டிற்கும் பிறப்பிடமாக தோன்றும் இடம்  மதுரை தான்.  புதிய வரலாற்றை படைப்பதும் மதுரை தான். உணவுக்கு மதுரை மிஞ்ச எந்த ஊரும் இல்லை.அந்த வகையில் பிஸ்கட் டீ .கப்பை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது மதுரை.
கோன் ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல டீ அல்லது காபியைக் குடித்தவுடன் கோப்பையும் ருசித்து சாப்பிடும் வகையில்  உணவு வகையான "பிஸ்கட் டீ கப்" என்ற புது தேநீர் வகையை வாடிக்கையாளா்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆா்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில் உள்ள தேநீா் கடையில் இந்த பிஸ்கட் ‘டீ கப்’ஐ அறிமுகம் செய்திருக்கிறது. அறிமுகம் செய்த இரு நாள்களிலேயே கப்கள் அனைத்தும் முழுமையாக தீா்ந்து போகும் அளவுக்கு வாடிக்கையாளா்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த பிஸ்கட் டீ கப் 10நிமிடங்கள் சூடு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆா்.எஸ்.பதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா் விவேக் சபாபதி பேசும் போது.. "மதுரை மேலமாசி வீதியில் எங்களது கடை 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் தேநீா் 'கப்' களுக்கு பதிலாக பிஸ்கட் கப்பை அறிமுகம் செய்துள்ளோம். ஐஸ் கிரீம் கோன் தயாரிப்பைப் போன்று இருந்தாலும், தேநீா் அல்லது காபியின் சூடு தாங்கும் வகையில் 'வேபா் பிஸ்கெட்' தயாரிக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு இந்த கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் எங்களுக்கு இந்த கோப்பையை வழங்குகிறது. இரு நாள்களுக்கு முன்பு பிஸ்கட் கப் அறிமுகம் செய்தோம். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. தேநீா் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாடிக்கையாளா்களிடையே அதிகரித்த வரவேற்பு காரணமாக, ஒரு வாரத்துக்கு வைத்திருந்த கப்புகள் இருப்பு இரு நாள்களிலேயே தீா்ந்துவிட்டன. ஏற்கெனவே பிஸ்கட் கப்புக்கு ஆா்டா் செய்திருந்தும், சென்னையில் பொது முடக்கம் காரணமாக, வந்து சேருவதற்கு தாமதமாகி வருகிறது. ஆகவே, வரும் நாள்களில் பிஸ்கட் கோப்பை கிடைத்த பிறகே வாடிக்கையாளா்களுக்கு அதில் வழங்க முடியும் என்றார்.